

தேனி
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசி மர்மநபர்கள் அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியகுளம் தென்கரை பகுதியில் திருவள்ளுவர் சிலை ஒன்று இருக்கிறது. இச்சிலைக்கு இன்று (நவ.7) பாஜகவினர் சார்பில் மாலை அணிவித்து பூஜை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக காலையில் தேனி பாஜக பிரமுகர் ராஜபாண்டியன் தலைமையிலான பாஜகவினர் அங்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசப்பட்டிருப்பதாகக் கூறி போராட்டம் செய்தனர்.
உடனடியாக தென்கரை காவல்நிலையத்துக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்குவந்த போலீஸார் பாஜகவினருடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவருக்கு பூஜை நடத்தப்படுகிறது
திருவள்ளுவர் சிலையை அவமதித்தவரை சிலை அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் பதிவைக் கொண்டு கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர்.
போலீஸார் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து பாஜகவினர் திருவள்ளுவர் சிலையை சுத்தப்படுத்தி மாலை அணிவித்து பூஜை செய்து கலைந்து சென்றனர்.
முன்னதாக கடந்த 5-ம் தேதி தஞ்சை பிள்ளையார்பட்டியில் வள்ளுவர் சிலையின் கண்களில் கறுப்புத் துணி கட்டப்பட்டு மைவீசி அவமதிக்கப்பட்டிருந்தது. பின்னர் நேற்று அச்சிலைக்கு இந்து முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத் பூஜை செய்தார். சிலை அவமதிப்பு தொடர்பாக போலீஸார் ஒருவரைக் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும், சிலைக்கு யாரும் பூஜை செய்யவும் கூடாது என்று தடை விதித்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசி மர்மநபர்கள் அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு ருத்ராட்சமும் காவி உடையும் அணிவித்து புகைப்படம் வெளியிட்ட நாள் முதல் திருவள்ளுவர் உருவம் தொடர்பாக சர்ச்சை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.