Published : 07 Nov 2019 01:48 PM
Last Updated : 07 Nov 2019 01:48 PM

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை எந்தக் கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும்: தேமுதிக தீர்மானம்

சென்னை

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை எந்தக் கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும் என, தேமுதிக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேமுதிக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ.7) சென்னை, கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1:

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், அச்சிரபாக்கம் வடக்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ஜெயசூர்யா சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு இக்கூட்டத்தின் வாயிலாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீபாவளி அன்று தமிழகத்தையே ஆழ்ந்த துயரத்துக்கு உள்ளாக்கிய திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிர் நீத்த குழந்தை சுஜித் மறைவுக்கு இக்கூட்டத்தின் வாயிலாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 2:

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர உள்ளது. தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டணியின் மூலம் நமக்கு ஒதுக்கப்படும் உள்ளாட்சி இடங்களில் போட்டியிட்டு, உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக வெற்றிபெறுவதற்கு முழு மூச்சுடன் செயல்படவேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தோடு, கூட்டணி போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய பாடுபட வேண்டும்.

தீர்மானம் 3:

அதிகமாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் ஏழை, எளிய மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்கள். மர்ம காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்களை ஒழிப்பதற்கும், சிறப்பானதொரு சிகிச்சையை பொதுமக்களுக்கு கொடுத்து வரும் மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பாராட்டுவதுடன், பொதுமக்களும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் தமிழக அரசு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.

தீர்மானம் 4:

மழைக்காலங்களில் சாலைகள், தெருக்கள் அதிகமாக சேதம் அடைந்துள்ளதால், பொதுமக்கள் வாகனத்தில் பயணிக்கும் பொழுது அதிக சிரமத்திற்கு உள்ளாவதால், உடனடியாக அரசு நிதி ஒதுக்கீடு செய்து சாலைகளைச் சீரமைக்க வேண்டும்.

தீர்மானம் 5:

பொதுமறை தந்த திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை வைத்து அரசியல் செய்வதை எந்தக் கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். இது தேவையில்லாத பல மோதல்களையும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்தக் காரணமாக அமைந்துவிடும். அதனால் தமிழக அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் தொடராத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x