Published : 07 Nov 2019 12:06 PM
Last Updated : 07 Nov 2019 12:06 PM

மூன்றரை ஆண்டுகளாகியும் முடிவுக்கு வராத ஆளுநர் - முதல்வர் மோதல்: இருவரும் மாறி மாறி புகார்

புதுச்சேரி

துணைநிலை ஆளுநர்-அமைச்சரவை மோதல் மூன்றரையாண்டுகளாகியும் முடிவுக்கு வராத சூழலே நிலவுவதால் புதுச்சேரி மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். போட்டி அரசு நடத்துவதாக முதல்வர் நாராயணசாமி பொய் சொல்வதாக கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணியானது கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற நிலையில் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்றது. புதுச்சேரி மிகுந்த வளர்ச்சியடையும் என்று மக்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். யாருக்கு அதிகாரம் என்ற போட்டியில் புதுச்சேரி வளர்ச்சி பின்னோக்கிச் சென்றுள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளாக முக்கியத் திட்டங்கள் முடங்கியுள்ளன.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மக்களாட்சி எடுக்கும் முடிவைச் செயல்படுத்த முடியவில்லை. இறுதி முடிவை ஆளுநர்தான் எடுக்க வேண்டும். அமைச்சரவை கூடி எடுக்கும் முடிவைக் கூட செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது. நீதிமன்றத்தை நாடி அமைச்சரவைக்குதான் அதிகாரம் என்ற தீர்ப்பும் பெறப்பட்டது. அதையடுத்து தீர்ப்பு நடைமுறையில் இருந்தாலும் திட்டங்கள் செயல்படுத்துவதில் சுணக்கமே உள்ளது. தற்போது இத்தீர்ப்பு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பல திட்டங்கள் செயல்படாததால் ஏராளமான மக்கள் வெளிப்படையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினர் மீதும் கடும் கோபத்திலும் உள்ளனர். எனினும் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற மூன்று இடைத்தேர்தல்கள், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸே வென்றது. இதற்கு எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தொடர் மவுனமும், மக்கள் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்காததும் முக்கியக் காரணம் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

இடைத்தேர்தலில் தொழிலதிபராக இருக்கும் அரசியல்வாதிகளே வென்றதாகவும் பலரும் கருதுகின்றனர். காமராஜர் நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு மீண்டும் மக்கள் நலத்திட்டங்கள் முடக்கத்தைத் தீர்வு காண்பதற்குப் பதிலாக முதல்வரும், ஆளுநரும் மீண்டும் மாறி மாறி குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர்.

முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "போட்டி அரசை ஆளுநர் கிரண்பேடி நடத்த முயல்வதாக அவருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். கட்டுமானப் பணிகளுக்காகவும், வளர்ச்சி திட்டங்களுக்காகவும் ரூ.300 கோடி வெளிச்சந்தையில் கடன் பெறுவதற்கான கோப்பை ஆளுநருக்கு அனுப்பினோம். அதற்கு அனுமதி தராமல் வைத்துக் கொண்டுள்ளார். இப்படித்தான் ஒவ்வொரு திட்டத்தையும் தடுத்து வருகிறார்" என்று புகார் தெரிவித்தார்.

அதற்கு ஆளுநர் கிரண்பேடி பதில் அளிக்கையில், "முழுவதும் பொய். வெளிச்சந்தையில் கடனாக ரூ. 900 கோடி பெற கடந்த செப்டம்பர் 25-ல் கோப்பு வந்தது. நிதித்துறை செயலரிடம் கலந்து ஆலோசித்தேன். அதைத் தொடர்ந்து அக்டோபர் 14-ல் கோப்புக்கு ஒப்புதல் தந்துவிட்டேன். என்னிடம் கோப்புகள் ஏதும் நிலுவையில் இல்லை" என்று தெரிவித்தார்.

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பல பணிகள் மும்முரமாக நடக்கையில் சிறிய மாநிலமான புதுச்சேரி மக்கள் கடும் பாதிப்பில் உள்ளதாகக் கருதுகின்றனர். ஆனால், அதிகாரப் போட்டியில் இக்குரல் அவர்கள் காதில் கேட்கவே இல்லை.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x