Published : 07 Nov 2019 10:37 AM
Last Updated : 07 Nov 2019 10:37 AM

ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாநாடு: மாநில மொழிகள் புறக்கணிப்பு; வைகோ கண்டனம்

சென்னை

ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாநாட்டில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று (நவ.7) வெளியிட்ட அறிக்கையில், "டெல்லியில், ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு 2020 ஜனவரி 15 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த மாநாட்டை பள்ளி தலைமைக்கான தேசிய மையம் நடத்துகிறது. மாநாடு தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், நவம்பர் 1 ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "டெல்லியில் நடைபெற உள்ள ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த மாநாட்டில் கல்வியாளர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் தலைமைப் பண்பு சிறப்பு குறித்த அறிக்கை அல்லது காணொலியை இந்தி அல்லது ஆங்கில மொழியில் அனுப்பி வைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசு, 2014 ஆம் ஆண்டில் பள்ளி தலைமைக்கான தேசிய மையம் தொடங்கிய பின்னர் நடைபெற்ற இதுபோன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது ஆசிரியர்களில் இந்தி, ஆங்கிலம் மொழி ஆளுமை மிக்கவர்கள் மட்டுமே தலைமைத் திறன் மேம்பாடு பயிற்சி பெற முடியும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வரையறுத்து இருப்பதன் மூலம் இந்தி மொழி திணிப்புக்கு வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய கல்விக் கொள்கையில் இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதனை இறுதி செய்வதற்குள் ஒவ்வொன்றாக செயல்படுத்த பாஜக அரசு முனைந்துள்ளது கண்டனத்துக்கு உரியது.

பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதன் மூலம்தான் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்ட முடியுமே தவிர, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியை வலிந்து திணிப்பது ஒருமைப்பாட்டுக்கு உலை வைத்துவிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் டெல்லியில் நடைபெற உள்ள ஆசிரியர்கள் தலைமைப் பண்பு மேம்பாடு மாநாடு மற்றும் பயிலரங்கில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் ஆளுமைமிக்க ஆசிரியர்களையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்," என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x