

சென்னை
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 10 நாள் அரசுமுறை பயணமாக நாளை காலை அமெரிக்கா செல்கிறார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நவ. 8-ம் தேதி (நாளை) முதல்17-ம் தேதி வரை, அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா வின் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறார். இதற்காக, நவ.8-ம் தேதி காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சிகாகோ செல்கிறார்.
நவ.9-ம் தேதி மாலை சிகாகோ தமிழ்ச்சங்கம் சார்பாக நடத்தப் படும் குழந்தைகள் தின நிகழ்ச் சியில் பங்கேற்கிறார். 10-ம் தேதி அமெரிக்கன் மல்டி எத்னிக் கொலிஷன் சார்பில் நடத்தப்படும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார்ஸ் 2019 விழாவில் சர்வதேச வளர்ந்து வரும் தலைவர்- ஆசியா என்ற விருது துணை முதல்வருக்கு வழங்கப்படுகிறது.
தொடர்ந்து நவ.12-ம் தேதி சிகாகோ நகர மேயர் மற்றும் இல்லினாய்ஸ் ஆளுநர் மற்றும் இதர முக்கிய பிரமுகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். மேலும், தமிழ் முதலீட்டாளர்கள் சார்பில் நடத்தப்படும் வட்டமேசை கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதன்பின் நவ.13-ம் தேதி வாஷிங்டன் செல்லும் துணை முதல்வருக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
நவ.14-ம் தேதி ஹூஸ்டன் நகருக்கு சென்று தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அங்குள்ள முக்கிய தொழில்முனைவோரிடம் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடுகிறார். நவ.15-ம் தேதி ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான நன்கொடையாளர்கள் அமைப்பை தொடங்கி வைக்கிறார்.
16-ம் தேதி நியூயார்க் சென்று, தமிழ் அமைப்புகள் சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். துணை முதல்வருடன் நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் உடன் செல்கிறார். பயணத்தை முடித்துவிட்டு துணை முதல்வர் நவ.17-ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.
புதிய திட்டங்களுக்கு நிதி பெறுவது குறித்து உலக வங்கி உயர் அலுவலர்களை சந்தித்து பேசுகிறார். தமிழகத்துக்கு தொழில்முதலீடுகள் திரட்டுவது குறித்து இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளையும் அவர் சந்திக்கிறார். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.