

சென்னை
வருமானவரித் துறையிடம் இருந்து இதுவரை நோட்டீஸ் வரவில்லை என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் ரூ.1,600 கோடி மதிப்புள்ள 7 பினாமி நிறுவனங்களை வருமானவரித் துறை முடக்கி வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியதாவது:வருமானவரித் துறை சோதனை நடத்தி முடித்த பின்னர் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகளை விசாரணைக்காக 90 நாட்கள் முடக்கி வைப்பது வழக்கமான நடைமுறை.
அதேபோல் சசிகலாவின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. முறைப்படி மனு கொடுத்து, அவற்றின் முடக்கம் நீக்கப்பட்டு விட்டது. சசிகலா தொடர்புடைய நிறுவனங்களில் அவர் பங்குதாரர், இயக்குநர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வருகிறார். இந்த நிறுவனங்களில் ரூ.1,600 கோடிக்கு போலி வங்கி கணக்குகள், வரி ஏய்ப்பு போன்ற எந்தப் புகாருமே கிடையாது.
வருமானவரித் துறை சோதனை நடத்தி முடித்த பிறகு சொத்து விவரங்கள் குறித்து எங்களிடம் கேள்வி கேட்பார்கள், நாங்கள் அதற்கு பதில்சொல்வோம், அதன் பின்னரே வருமானவரித் துறை அதிகாரிகள் இறுதி முடிவு எடுப்பார்கள். ஆனால், விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் இருக்கும்போதே, சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக செய்தி கள் வருவது ஏன் என்று தெரியவில்லை. சொத்துகள் முடக்கப்பட்டதாக வருமானவரித் துறையிடம் இருந்து இதுவரை நோட்டீஸ் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.