செல்ஃபி மோகத்திலிருந்து விடுபட வேண்டும்: பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

செல்ஃபி மோகத்திலிருந்து விடுபட வேண்டும்: பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்
Updated on
2 min read

சென்னை

செல்ஃபி மோகத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் ஒவ்வொரு மாவட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாவட்ட சிறப்பு முகாம், கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை சார்பில் பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, மீன்வளத் துறை உள்ளிட்ட துறைகள் மேற்கொள்ளும் மீட்பு பணிகள் குறித்து விளக்கும் கண்காட்சிகளையும் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, பேரிடர் காலங்களில் சாலையில் சாய்ந்த மரங்களை அறுக்கும் முறை குறித்து பேரிடர் மீட்பு படையினர் செய்முறை விளக்கம் அளித்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு துறை சார்பில் உயரமான கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்டோரை அந்த கட்டிடங்களில் இருந்து மீட்கும் முறையை செய்து காட்டினர்.

தொடர்ந்து, அங்கு நடைபெற்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று, பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு, தற்காப்பு முறைகள் குறித்த குறும்படங்கள் அடங்கிய குறுந்தகடை வெளியிட, அதை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெற்றுக்கொண்டார். பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றன. ஆனால் உயிரிழப்புஏற்படுவதில்லை.

அந்த அளவுக்கு தற்காப்பு குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். அந்த நிலை தமிழகத்தில் ஏற்பட வேண்டும். அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. விழிப்புணர்வு பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதை பொதுமக்கள் அலட்சியப்படுத்தக் கூடாது. ஆற்றின் கரையோரம், கிணறு அருகில் நின்று செல்ஃபி எடுக்கும்போது பலர் உயிரிழக்கின்றனர். முதலில் செல்ஃபி மோகத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டும். இயற்கைக்கு சவால் விடுவதை கைவிட வேண்டும். அரசு கூறும் அறிவுரைகளை கேட்டு, கவனக்குறைவாக செயல்படுவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசும்போது, மாணவ - மாணவியரிடம் பொதுஅறிவு தொடர்பான கேள்விகளை கேட்டு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 பரிசு வழங்கினார். தொடர்ந்து, மாணவ, மாணவியர் அனைவரும் நீச்சல் கற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், தமிழநாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை தலைவர் மகேஷ் குமார் அகர்வால், மீன் வளத் துறை இயக்குநர் சமீரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in