

சென்னை
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 11-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 11-ம் தேதி திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். திமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
வரும் 10-ம் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுக்குழுவில் கட்சியின் கடந்த ஓராண்டு கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். அடுத்த ஓராண்டுக்கான செயல் திட்டங்கள் குறித்தும் முடிவு செய்யப்படும். அண்மையில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது குறித்து பொதுக்குழுவில் நேர்மையாக விவாதிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல், ‘முரசொலி’ பஞ்சமி நில சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பொதுக்குழுவில் விவாதிக்கப்படவுள்ளன. முக்கியத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன இந்நிலையில் நவம்பர் 11-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.