

கேளம்பாக்கம்
தாழம்பூர், கூடுவாஞ்சேரி, காயார் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதால், தொழில் போட்டிக்கு பயன்படுத்துவதற்காக கஞ்சா விற்பனை கும்பல்கள் துப்பாக்கி வைத்துள்ள தகவல்களால், புறநகர் பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான தாழம்பூர், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம், காயார் மற்றும் திருப்போரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், சென்னையின் புறநகர் பகுதிகளாகவும் விளங்கி வருவதால், வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் குடியேறியுள்ளனர்.
இவர்களில் சிலர், ஈசிஆர் சாலை பகுதியில் உள்ள விடுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரி இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதில், நெடுங்குன்றம் சூர்யா மற்றும் பெருமாட்டு நல்லூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் ஆகியோரிடையே கஞ்சா விற்பனை போட்டி நிலவுவதால் இருதரப்பு கும்பலிடமும் துப்பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸார் சூர்யாவை பிடித்தபோது அவரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
தற்போது வேங்கடமங்கலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்த விஜய், பெருமாட்டு நல்லூர் செல்வம் கும்பலை சேர்ந்தவர் என்றும், இவர் ஏற்கெனவே, பெருமாட்டு நல்லூர் பகுதியில் முக்கியப் பிரமுகர் ஒருவரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், கடந்த 2017-ம் ஆண்டு கூடுவாஞ்சேரி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்றும் கூறப்படுகிறது. தற்போது நடந்துள்ள சம்பவத்தின் மூலம் இருதரப்பு கும்பலிடமும் துப்பாக்கிகள் இருப்பது உறுதியாகி உள்ளது.
வேங்கடமங்கலம், ரத்தினமங்கலம், நல்லாம்பாக்கம், கீரப்பாக்கம், காரணை புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள், வடமாநில இளைஞர்கள் மூலம் சில ஆயிரங்களை மட்டுமே செலவு செய்து துப்பாக்கி வாங்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு தாழம்பூர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் டன் கணக்கில் கஞ்சா மூட்டைகளை சென்னை, சாஸ்திரி நகர் போலீஸார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் என்ற கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட நிலையில், காயார் அடுத்த கீரப்பாக்கம் கல்குவாரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சரவணனை கடத்தி வருவதற்காக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் இதற்காகவே, கீரப்பாக்கம் பகுதியில் திட்டம் தீட்டப்பட்டு கொலை சம்பவம் அரங்கேறியதாகவும் போலீஸ் வட்டாரங்களில் கூறப்பட்டன.
ஆனால், வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ததால், மாவட்ட காவல் துறை துப்பாக்கி தகவலை பெரிதுப்படுத்தவில்லை. தற்போது நடைபெற்றுள்ள சம்பவமும் மேற்கண்ட பகுதியில் துப்பாக்கி புழக்கம் உள்ளதை உறுதிப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
எனவே, மாவட்ட காவல்துறை இதற்குப் பிறகாவது மேற்கண்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுத்து, புறநகர் பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.