Published : 07 Nov 2019 08:35 AM
Last Updated : 07 Nov 2019 08:35 AM

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா கோலாகலம்; மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை: பெருவுடையாருக்கு 48 திரவியங்களால் அபிஷேகம்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு 52 அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெருவுடையாருக்கு 48 திரவியங்களால் பெரும் அபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,034-வது ஆண்டு சதய விழாவையொட்டிய 2 நாள் நிகழ்ச்சிகள் தஞ்சாவூரில் நேற்று முன்தினம் தொடங்கின. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 7 மணிக்கு பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, சதய விழாக் குழுத் தலைவர் துரை.திருஞானம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ராஜராஜ சோழன் சிலை அருகில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு கோயிலுக்கு விழாக் குழுவினர் வந்தனர். இதைத் தொடர்ந்து, பெரிய கோயிலில் உள்ள பெருவுடையார், பெரியநாயகி அம்பாளுக்கு 42-வது ஆண்டாக திருவேற்காடு கருமாரி பட்டர் அய்யப்ப சுவாமிகள் தலைமையில் 48 திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, தீப வழிபாடு நடைபெற்றது.

இதற்கிடையே, மங்கள வாத்தியங்கள் முழங்க யானை மீது தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறைகள் வைக்கப்பட்டு நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா நடைபெற்றது.

52 அமைப்புகள் மரியாதைராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்கெனவே காவல் துறையிடம் பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்புகள் என 52 அமைப்புகள் அனுமதி கேட்டிருந்தன. இதையடுத்து ஒவ்வொரு அமைப்புக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி காவல் துறை அனுமதி வழங்கியது.

அதன்படி, நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்து மக்கள் கட்சி, பாஜக, நாம் தமிழர் கட்சி, பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு, அண்ணா திராவிடர் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், முக்குலத்தோர் புலிப்படை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 52 அமைப்பினரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாலை அணிவிக்கும்போது எந்த ஒரு அமைப்பினரும் தங்களது கொடி, சின்னங்களை கொண்டு செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை. மேலும், மாலை அணிவித்துவிட்டு ராஜராஜ சோழனை வாழ்த்தி மட்டுமே முழக்கங்களை அங்கு எழுப்ப வேண்டும் என போலீஸார் கூறியதை அனைவரும் கடைபிடித்தனர்.

சதய விழாவின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பெரிய கோயில் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் பெரிய கோயில் பகுதியில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

பின்னர், பிற்பகல் 3.30 மணிக்கு மங்கள இசையுடன் மேடை நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றன. ஆறுமுகம் குழுவினரின் நாத சங்கமம் இசை நிகழ்ச்சி, திருவையாறு ஆடல்வல்லான் நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டியம், தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் கோ.ப.நல்லசிவத்தின் திருமுறை இசைச் சொற்பொழிவு, தஞ்சாவூர் பெரிய கோயிலின் கட்டுமான விந்தைகள் குறித்து பொறியாளர் எஸ்.ராஜேந்திரனின் ஒலி-ஒளிக் காட்சி, கிராமிய இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

உடையாளூர், பட்டீஸ்வரத்தில்..

இதேபோல, கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜ சோழனின் சமாதி உள்ளதாகக் கூறப்படும் இடத்தில் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், திரைப்பட இயக்குநர் கவுதமன், ராஜராஜ சோழன் கல்வி பண்பாட்டு கழகத்தினர், பாமக மாநில நிர்வாகி வைத்தி, முன்னாள் பாமக மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின், இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார், அண்ணாமலை சித்தர் சுவாமிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வழிபட்டனர்.

இதேபோல, கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள ராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவிக்காக எழுப்பப்பட்ட பள்ளிப்படை கோயிலில் முதன்முறையாக நேற்று ராஜராஜ சோழனின் சதய விழா நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x