Published : 06 Nov 2019 17:59 pm

Updated : 06 Nov 2019 18:05 pm

 

Published : 06 Nov 2019 05:59 PM
Last Updated : 06 Nov 2019 06:05 PM

திருவள்ளுவர் நிச்சயமாக கடவுள் பக்தி கொண்டவராகத்தான் இருக்க முடியும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

thiruvalluvar-definitely-will-be-god-believer
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி: கோப்புப்படம்

மதுரை

திருவள்ளுவர் நிச்சயமாக கடவுள் பக்தி கொண்டவராகத்தான் இருக்க முடியும் என, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று (நவ.6) அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி?

ஏற்கெனவே இருந்து வரும் கூட்டணி தொடரும் என்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் கூறியுள்ளார்கள். வெற்றி வாய்ப்பைப் பொறுத்தவரையில் அதிமுகவுக்கு சாதகமாகத்தான் மக்களின் மனநிலை தற்போது மாறியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவின் நல்லாட்சி தொடரும்.

தமிழகத்தைச் சேர்ந்த திருவள்ளுவரை வடநாட்டவர்கள் மதச்சாயம் பூசி வருகின்றனர் என்று திமுக எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளாரே?

திருவள்ளுவர் நிச்சயமாக கடவுள் பக்தி கொண்டவராகத்தான் இருக்க முடியும். அவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே கிடையாது. அவர் திருக்குறளில் கூறிய உள்ளார்ந்த கருத்துகளைப் பார்க்கும்பொழுது இந்து மதப் பற்றாளராகத்தான் இருப்பார் என்பதன் அடிப்படையில்தான் என்னைப் போன்றோர் கருத வாய்ப்புள்ளது.

வடக்கு, தெற்காக இருந்தாலும் திருவள்ளுவரின் புகழ் இறை வழிபாடு கொண்டவர்களின் குரலாகத்தான் நடைமுறை இருந்திருக்கிறது என்பது என்னுடைய கருத்து.

துணை முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து?

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் எவ்வாறு நாட்டுக்குப் பயனானதாக இருந்ததோ, அதேபோல் துணை முதல்வரின் வெளிநாட்டுப் பயணமானது தமிழ்நாட்டு மக்களுக்கும் துறை சார்ந்த திட்டங்களுக்கும் பயனுள்ளதாக நிச்சயமாக அமையும்.

ஆவின் தலைவராக தமிழரசன் தேர்ந்தெடுக்கப்பட்டது தவறானது என வழக்குத் தொடரப்பட்டுள்ளதே?

தேர்தல் ஆணையம் 6 கூட்டுறவு ஒன்றியங்களில் தலைவர்களுக்கான தேர்தலை அறிவிக்க உள்ளது. தொடர்ந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் முதல்வரின் அனுமதியோடு அவர்கள் வெற்றி பெற்ற பிறகு பதவி ஏற்பார்கள்.

திருவள்ளுவருக்குப் பதிலாக பெரியார் என பிள்ளையார்பட்டியில் ஸ்டாலின் கூறியுள்ளாரே?

ஸ்டாலினுக்கு நினைவாற்றல் குறைந்து வருகின்றது அல்லது பதற்றத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். குறிப்பாக திருமண இல்லத்திற்குச் சென்றிருந்தபோது மணமகன் பெயருக்குப் பதிலாக மாமனார் பெயரைக் கூறினார்.

இவ்வாறு பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதனைக் குறை கூற வேண்டியது இல்லை. அதை உடல் ரீதியான பிரச்சினையாகக் கருதவேண்டும். வயது முதிர்வின் காரணமாக அனைவருக்கும் மறதி இருக்கத்தான் செய்யும். அது ஒரு தவறு கிடையாது.

உள்ளாட்சித் தேர்தல் கூட்டத்தில் என்னவெல்லாம் ஆலோசிக்கப்பட உள்ளது?

தற்போது அதற்கான கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க உள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

கூட்டணிக் கட்சியான பாஜக, இரண்டு மேயர் இடங்களைக் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே?

மேயர் இடங்களைப் பொறுத்தவரையில் எத்தனை இடங்கள் வழங்க வேண்டுமென்ற முடிவு முதல்வர் மற்றும் துணை முதல்வருக்குத்தான் உண்டு. எந்த முடிவாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அதிமுகவின் வெற்றிக்காகவும், கூட்டணிக் கட்சியின் வெற்றிக்காகவும் பாடுபடுவோம்.

ஆசியக் கூட்டத்தில் பிரதமர் கையெழுத்திடாதது குறித்து?

கையெழுத்திட்டால் பாதிப்பு வரும் என்பதனாலேயே தான் பிரதமர் கையெழுத்திடவில்லை. ஆகையால், அது நல்ல செயல்தான். முதல்வராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் நாட்டு மக்களின் நன்மைக்காகத்தான் உழைத்து வருகின்றனர். இவர்கள் சாமானியர்களாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள்.

ஆகையால் அடித்தட்டு மக்களின் நிலைமை இவர்களுக்குத் தெரிந்ததுதான். பிரதமரும் முதல்வரும் மக்களைப் பாதிக்கும் எந்தவிதத் திட்டத்திற்கும் கையெழுத்திட மாட்டார்கள்.

இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

எஸ்.ஸ்ரீநிவாசகன்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதிருவள்ளுவர்மு.க.ஸ்டாலின்Minister rajendra balajiThiruvalluvarMK stalin

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author