Published : 06 Nov 2019 05:29 PM
Last Updated : 06 Nov 2019 05:29 PM

மதுரை மக்களை அச்சுறுத்தும் ‘ஆர்மி ஜெரஸ்’ கொசுக்கள்: கூண்டோடு ஒழிக்க 20,000 லிட்டர் கொசு ஒழிப்பு ஆயில் கொள்முதல்- மாநகராட்சி நடவடிக்கை

மதுரை

மதுரையில் நிரந்தரமாகக் காணப்படும் ‘ஆர்மி ஜெரஸ்’ கொசுக்களை ஒழிக்க, 20 ஆயிரம் லிட்டர் எம்எல்ஓ ‘மஸ்கியூட்டோ’ ஆயிலை (MLO Mosquito Oil) மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது.

இவற்றை, சாக்கடைக் கால்வாய்களில் தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொசுத் தொல்லை அதிகமாக இருக்கும் நகரங்களில் மதுரையும் ஒன்று. ஆண்டு முழுவதும் வெயில் காலம், மழைக்காலம் வித்தியாசமில்லாமல் கொசுத் தொல்லையால் நிம்மதியாக தூங்க முடிவதில்லை என்ற ஆதங்கம் மதுரை மக்களிடம் எப்போதுமே இருக்கிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், பஸ்நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கொசுக்கடியால் மக்கள், நோயாளிகள் தவிக்கும் பரிதாபம் தொடர்கிறது. கொசுக்களை கட்டுப்படுத்தவும், அவை உற்பத்தியாகும் சாக்கடை கால்வாய்களை பராமரிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்ததால் கொசுக்களை ஒழிக்கவே முடியவில்லை.

இந்நிலையில் தற்போது மக்களை தொல்லைக்கு உள்ளாக்கும் கொசுக்களை நிரந்தரமாக அழிக்க மாநகராட்சி நிர்வாகம் தற்போது 20,000 லிட்டர் ‘மஸ்கியூட்டோ’ ஆயிலை வாங்கியுள்ளனர்.

ஒரிரு நாளில், சாக்கடைக் கால்வாய்கள், செப்டிக் டேங்க், பொதுக்கழிப்பிடங்களில் இந்த ஆயிலை மாநகராட்சி ஊழியர்கள் ‘ஸ்பிரே’ செய்ய உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கொசுக்களில் நிறைய வகை உண்டு. அதில், அனாப்ளஸ்(Anopheles), கியூலக்ஸ்(Culex), ஆர்மி ஜெரஸ்(Armigeres), ஏடிஎஸ் போன்ற கொசுக்கள் முக்கியமானவை.

இவை மதுரையில் அதிகமாகவே உள்ளன.

அனாப்ளஸ் கொசு மலேரியாவையும், கியூலக்ஸ் கொசு யானைக்கால் நோயையும், ஏடிஎஸ் டெங்குவையும், சிக்கன்குன்யாவையும் பரப்பும். ஆர்மி ஜெரஸ் கொசுக்கள் எந்த நோயையும் பரப்பாது. கடிக்கும், இலேசாக அரிக்கும். அவ்வளவுதான், எந்த நோய் தொந்தரவும் தராது. ஆனால், தூங்க முடியாது.

ஒரு இடத்தில் சில நிமிடங்கள் கூட நிற்க முடியாது. இந்த ஆர்மி ஜெரஸ் கொசுக்கள், மற்ற கொசுக்களை விட பெரிதாக இருக்கும். இந்த கொசுக்கள் சாக்கடை கால்வாய் தண்ணீர், செப்டிக் டேங் கழிவு நீர் போன்ற அழுக்கு தண்ணீரில் மட்டுமே வளரக்கூடியவை.

ஏடிஎஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே வளரக்கூடியவை. வீடுவீடாக பணியாளர்கள் சென்று இந்த கொசுக்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

அந்த கொசு மருந்தில் அனாப்ளஸ் கொசுக்களையும் கட்டுப்படுத்திவிடலாம். ஆனால், கியூ லக்ஸ், ஆர்மி ஜெரஸ் சாக்கடை தண்ணீரில் மட்டுமே வரக்கூடியவை. இவற்றை ஒழிக்க மஸ்கியூட்டோ ஆயிலை சாக்கடை தண்ணீரில் தெளித்தல் அவசியம்.

ஆர்மி ஜெரஸ் கொசுக்களை ஏன் ஒழிக்க முடியவில்லை?

மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள சாக்கடை கால்வாய்கள் சரியான பராமரிப்பில் இல்லை. சாக்கடைத் தண்ணீர் நிரந்தரமாகவே தேங்கி நிற்கின்றன. மேலும், இந்த சாக்கடை கால்வாய்கள் பெரிதாக உள்ளன. அவற்றை ஆட்களை இறக்கி பராமரிக்க இயலாது. இயந்திரங்கள் கொண்டுதான் பராமரிப்பு செய்ய முடியும். அந்த இயந்திரங்கள் இல்லை. குப்பைகளையும், உணவுக்கழிவுகளையும் மக்களும் விழிப்புணர்வு இல்லாமல் கொட்டுவதால் மதுரையில் கொசுக்கள் நிரந்தரமாகவே உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x