தஞ்சை திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்து பூஜை: அர்ஜுன் சம்பத் கைது

தஞ்சை திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்து பூஜை: அர்ஜுன் சம்பத் கைது
Updated on
1 min read

தஞ்சாவூர்

தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்து பூஜை செய்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார்.

தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், திருவள்ளுவரின் உடையை காவி நிறத்தில் மாற்றிப் பதிவிட்டிருந்தனர். இதற்கு பல அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். உலகப் பொதுமறை தந்தவர் வள்ளுவர், அவரையும் குறளையும் வைத்து அரசியல் செய்யாதீர்கள் என பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

இந்த விவகாரத்தில் திமுக - பாஜக இடையே கடும் மோதல் எழுந்தது. அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் உள்ளிட்ட பலரும் திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசக்கூடாது எனக் கண்டித்தனர். அனைத்துத் தரப்பு மக்களாலும் நாடு, மதம், மொழி, இனம் கடந்து திருக்குறள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று நடுநிலையாளர்கள் தெரிவித்தனர்.

சர்ச்சை கிளம்பிய அன்று தஞ்சையில் வள்ளுவர் சிலை மீது சில விஷமிகள் சாணி பூசி அவமதிப்பு செய்தனர். இதற்குப் பலத்த கண்டனம் எழுந்தது . திருவள்ளுவர் சிலையைச் சுத்தம் செய்து மாலை அணிவித்த தமிழ் அமைப்பினர் இந்தச் செயலைச் செய்த நபர்களைக் கைது செய்ய வலியுறுத்தினர்.

திருவள்ளுவர் விவகாரத்தைக் கையிலெடுத்துள்ள இந்து அமைப்புகளின் தலைவர்கள் தினம் ஒரு அறிக்கை விடும் நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று தஞ்சைக்குச் சென்றார்.

சாணி பூசப்பட்டு விவகாரமான பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலை இருந்த பகுதிக்குச் சென்ற அவர், திடீரென தான் கொண்டுவந்த காவித்துண்டு, மாலை ஆகியவற்றை திருவள்ளுவருக்கு அணிவித்தார்.

பின்னர் ருத்ராட்ச மாலை அணிவித்து, திருநீற்றைப் பூசி கற்பூரம் ஏற்றி வள்ளுவருக்கு தீபாராதனை காட்டினார். திருவள்ளுவர் சிலை விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில், அர்ஜுன் சம்பத்தின் இச்செயல் மூலம் மீண்டும் பதற்றம் உருவாக வாய்ப்புள்ளது எனக் கருதிய போலீஸார் உடனடியாக அர்ஜுன் சம்பத்தைக் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in