Published : 06 Nov 2019 03:07 PM
Last Updated : 06 Nov 2019 03:07 PM

ஸ்டாலின் தியாகம் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்?- அமைச்சர் பாண்டியராஜனுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை

தியாகம் என்றாலே என்னவென்றே அறியாத ஒரு அரசியல் வியாபாரியான அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்டாலின் அனுபவித்த மிசா கொடுமையினை கொச்சைப்படுத்தி பேட்டி அளிப்பதா? என முன்னாள் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று விடுத்துள்ள அறிக்கை:

“தமிழக அமைச்சரவையில் பொறுப்புள்ள துறையில் அமைச்சராக இருக்கக் கூடியவர். அதற்கும் மேலாக மனிதவள மேம்பாட்டுத்துறை சார்ந்த தொழிலில் வருடத்திற்கு சில ஆயிரம் கோடிகளுக்கு தொழில் வர்த்தகம் செய்கின்றவர்.

தமிழக அமைச்சரவையில் தானும் ஒட்டிக்கொண்டு இருக்கின்றோம் என்ற இறுமாப்பு தலைக்கேறி ஒரு கண்ணியமிக்க எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், தான் வகிக்கின்ற அரசுப் பொறுப்பு மற்றும் தனி நபர் பொறுப்புகளை எல்லாம் துச்சமென தூக்கியெறிந்து விட்டு, அந்த தலைவரைப் பற்றி உண்மைக்குப் புறம்பான, எந்த ஆதாரமும் இல்லாத அபாண்டத்தைப் போகிற போக்கில் அள்ளி வீசி விட்டுச் செல்கிறார்.

ஸ்டாலினின் தியாக வரலாற்றில் சேற்றினை வாரி இறைக்கும் விதமாக, ஸ்டாலின் அனுபவித்த மிசா கொடுமையினை கொச்சைப்படுத்தி பேட்டி அளித்திருக்கின்றார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன். இது அவர் ஏற்றுக்கொண்டுள்ள தலைமையை எப்படியாவது தாஜா செய்து இன்னும் ஏதாவது பெரிய துறையில் கைவைக்க முடியாதா என்ற வெளிப்பாடே ஆகும்.

அமைச்சர் பாண்டியராஜனின் பேட்டி, வெறும் வார்த்தைகளாக இல்லாது வாய்க்கொழுப்பாக வெளியே வடிந்திருக்கிறது. அரசியல் என்பதே வியாபாரம் என்றும் அதில் தான் இருக்கும் ஒவ்வொரு நாளும் என்ன லாபம் என்று கணக்குப் போடும் பாண்டியராஜனின் கடந்த காலம் போன்றதல்ல தலைவர் ஸ்டாலினின் வரலாறு.

ஏறத்தாழ பொன்விழா காணும் அவரது பொது வாழ்வினைக் கொச்சைப்படுத்தும் தகுதி இல்லாத பாண்டியராஜன், தான் கடந்துவந்த அரசியல் பாதையை நினைத்து தன் முகத்தை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முதலில் பாஜகவில் இணைந்து அடுத்து ஓராண்டிலேயே தேமுதிகவுக்குத் தாவி எம்எல்ஏ ஆகி, பிறகு சாப்பிட்டு நனைத்த கை காய்வதற்குள் தன்னை எம்எல்ஏ ஆக்கிய விஜயகாந்துக்கு துரோகம் இழைத்து அதிமுக ஆதரவு அவதாரம் எடுத்து, அடுத்த தேர்தலில் அதிமுகவிலேயே இணைந்து ஆவடி தொகுதி வேட்பாளராகி, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி எம்எல்ஏ ஆகி, அதற்கு எதிரான வழக்கை இழுத்தடித்துக் கொண்டே ஜெயலலிதா இறந்த பிறகு ஓபிஎஸ்ஸோடு சென்று, பிறகு எடப்பாடியோடு ஐக்கியமாகி, அமைச்சராகியுள்ளார்.

அதிமுகவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக, அங்கிருந்துகொண்டே பேசுவதற்காக பாஜகவுக்கு தன் வாயை வாடகைக்கு கொடுத்துக் கொண்டு, தமிழக மக்களுக்கு எதிரான ஜிஎஸ்டி, நீட் தேர்வு, தமிழக கலாச்சாரம், பண்பாடு, கல்விக் கொள்கை, கடைசியாக திருவள்ளுவர் என்று எத்தனை ஆயிரம் வரலாறாக இருந்தாலும் அது தனக்கு அத்துப்படி என்பது போல் கருத்துச் சொல்லி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுழலாகச் செயல்படுவதற்கு எல்லாம், தன் முன்னேற்றத்திற்காக எதையும் -யாரையும் விற்கத் துணிந்த மனநிலை இருந்தால் மட்டுமே முடியும்.

தியாகம் என்றாலே என்னவென்றே அறியாத ஒரு அரசியல் வியாபாரியான மாஃபா பாண்டியராஜன், திமுக தலைவரின் தியாகத்தை, விமர்சிப்பதா? பதவி வெறி அவரை இப்படிப் பேசச் சொல்கிறது, எனக் கடந்து போக இயலாத வண்ணம் நாக்கில் நரம்பின்றி பேசியிருக்கிறார் பாண்டியராஜன். தான் பெற்ற பதவியை தக்க வைத்துக்கொள்ள அவர் பிறரை வேண்டுமென்றே எவ்வளவு வேண்டுமானாலும் புகழட்டும்.

ஆனால், “கீழடிப் பண்பாடு, தமிழ்ப் பண்பாடு அல்ல, அது பாரதப் பண்பாடு” என்று வாய் கூசாமல் திரித்துச் சொல்லும் பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித் துறைக்கு அமைச்சர் என்பதே தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவு.

திமுக தோழர்களை உசுப்புவது, தூங்குகின்ற புலியை இடறுவதற்குச் சமம் என்பதை உணர்ந்து வாய்த்துடுக்கை அடக்கி பாண்டியராஜன் உடனடியாக தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல் திமுக ஜனநாயக வழியில் எப்படி இத்தகைய அடாவடித்தனத்தை எதிர் கொள்ள வேண்டுமோ அதற்குத் தயாராகவே இருக்கின்றது”.

இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x