

விருதுநகர்
விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பெருமாள் இன்று (நவ.6) காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அதிகாலை 5 மணிக்கெல்லாம் அவர் அலுவலகம் வந்து பொறுப்பேற்றுக் கொண்டது காவலர்களுக்கு உற்சாகம் தருவதாக அமைந்தது.
விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்த ராஜராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு மதுரை மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கோவை மாநகர காவல் குற்றம் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு துணை ஆணையராகப் பணியாற்றி வந்த பெருமாள், விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் இன்று (நவ.6) பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணியளவில் விருதுநகர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பெருமாள் பொறுப்பேற்றுக்கொண்டார். காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்து அவரை வரவேற்றனர்.