

மதுரை
தென் இந்தியாவிலே முதல் முறையாக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடி செலவில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை பெற ‘பெட் ஸ்கேன்’(PET SCAN- positron emission tomography) இன்று (நவ.6) தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுகள் இருந்தாலும், அதற்கான முழுமையான சிகிச்சைகள் சென்னை, மதுரை மற்றும் கோவை போன்ற அரசு மருத்துவக்கல்லூரிகளிலேயே கிடைக்கிறது.
ஆனாலும், இந்த மருத்துவமனைகளிலும் இதுவரை புற்றுநோய்களை துல்லியமாகக் கண்டறியும் ‘பெட் ஸ்கேன்’ இல்லை. அதனால், ஆரம்ப நிலையிலே இந்த நோய்களை துல்லியமாகக் கண்டறிந்து நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத பரிதாபம் தொடர்ந்தது.
இந்நிலையில், தென் இந்தியாவிலே முதல் முறையாக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடி செலவில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை பெற வழிசெய்யும் பெட் ஸ்கேன் தொடங்கப்பட்டது.
தமிழ் இந்து செய்தி எதிரொலி..
பெட் ஸ்கேனின் அவசியம் குறித்து ‘தமிழ் இந்து’வில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விரிவான கட்டுரை வெளியிடப்பட்டது. நாளிதழில் வந்த இந்தக் கட்டுரையைக் குறிப்பிட்டு மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உடனடியாக ‘பெட் ஸ்கேன்’ அமைக்க உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, மதுரை, சென்னை, கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் ‘பெட் ஸ்கேன்’ அமைக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது.
தற்போது, இந்த மருத்துவமனைகளில் ‘பெட் ஸ்கேன்’ அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இதில், மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடியில் ‘பெட் ஸ்கேன்’ அமைத்து கடந்த 2 மாதமாக திறப்பு விழாவுக்குத் தயாராக இருந்தது. ஆனால், தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
இந்நிலையில் இன்று முதல்வர் கே.பழனிசாமி, சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம், மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ‘பெட் ஸ்கேன்’ மையத்தை திறந்து வைத்தார்.
மதுரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்பி சு.வெங்கடேசன், டீன் வனிதா மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தென் இந்தியாவிலே முதல் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் இந்த ‘பெட் ஸ்கேன்’ தொடங்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூட இந்த ஸ்கேன் இல்லை.
‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் இந்த ‘பெட் ஸ்கேன்’ ஏற்கெனவே உள்ளது. அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரையில் கொல்கத்தாவில் சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது.
1986-ம் ஆண்டில் இதேபோல் தமிழகத்திலே முதல் முறையாக சிடி ஸ்கேன், இந்த மதுரை அரசு மருத்துவமனையில்தான் தொடங்கி வைக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த ‘பெட் ஸ்கேன்’ முற்றிலும் இலவசமாக நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்து ரிப்போர்ட் வழங்கப்படுகிறது. விரைவில் சென்னை, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோவை, காஞ்சிபுரம் மருத்துவமனைகளிலும் இந்த ‘பெட் ஸ்கேன்’ தொடங்கப்படும்.
மதுரையில் ஏற்கெனவே ‘எய்ம்ஸ்’ அடிக்கல் நாட்டு நிலம் ஒப்படைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பணிகள் திட்டமிட்டபடி 36 மாதங்களில் முடிக்கப்படும். தமிழகத்தில் ஒரே ஆண்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அரசு மருத்துவமனைகளில் 95 சிடி ஸ்கேன், 28 எம்ஆர்ஐ ஸ்கேன் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் ஜப்பான் நாட்டின் ஜைகா நிறுவனம் சார்பில் ரூ. 291 கோடியில் புதிய ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை அரங்கு மையம் கட்டுமானப் பணி தொடங்கப்படும்" என்றார்.
‘பெட்’ ஸ்கேன்’ பரிசோதனை சிறப்பு என்ன?
‘பெட் ஸ்கேன்’ உதவியால் புற்றுநோய்களையும், அவை உருவாகும் இடங்களையும் துல்லியமாக ஆரம்ப நிலையிலே கண்டறிந்து சிகிச்சை தொடங்கலாம்.
புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்த பின், சிகிச்சையின் பலன்களை இந்த ஸ்கேன் கொண்டு அளவிடலாம். புற்றுநோய்களுக்கு மட்டுமில்லாது, இதயத் தசையின் செயல்பாட்டு நிலையைக் கண்டறிதல், மூளையில் ஏற்படும் மாற்றங்களால் உண்டாகும் ஞாபக மறதி நோயின் தன்மையைக் கண்டறியலாம்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
வலிப்பு நோய் ஏற்படக் காரணமாக உள்ள மூளையின் பாதிப்பு அடைந்த பகுதியைக் கண்டறியலாம். காரணம் இல்லாமல் உண்டாகக்கூடிய காய்ச்சல் உள்ள நோய்களுக்குக் காரணம் அறியலாம்.
இந்த ‘பெட் ஸ்கேன்’ பரிசோதனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால், மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் குறைந்த செலவில் ரூ.10,000 முதல் ரூ.11,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் இந்தக் கட்டணமும் இலவசமாக்கப்பட்டு நோயாளிகளுக்கு ‘பெட் ஸ்கேன்’ எடுக்கலாம். இந்த ‘பெட் ஸ்கேன்’ தொடங்கப்பட்டதால் மதுரை மாவட்டத்திற்கு மட்டுமில்லாது தென் தமிழக மக்களே புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளையைப் பாதிக்கும் நோய்களைக் கண்டறிந்து ஆரம்ப நிலையிலே சிகிச்சை பெறலாம்.