

சென்னை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ல் காவலாளியைக் கொலை செய்து கொள்ளையடித்ததாக சயான், மனோஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையான அவர்கள், கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமியை தொடர்புபடுத்தி பேட்டியளித்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், தொடர்ந்து சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு வருவதாகவும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் கூறி, குண்டர் தடுப்புச் சட்டட்தில் சிறையிலடைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர், 2019 மார்ச் 21-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சயான் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசாமல் தடுப்பதற்காகவே தன்னை குண்டர் சட்டத்தில் அடைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், 409 பக்கங்களில் தமிழில் ஆவணங்கள் கொண்ட குண்டர் சட்டக் கைது உத்தரவை தமிழ் தெரியாத தனக்கு, மலையாளத்தில் ஆவணங்கள் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை இன்று (நவ.6) விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு, ஆவணங்களை மலையாளத்தில் வழங்காத போதும், முறையாகப் படித்துக் காட்டவில்லை என்று கூறி, சயானை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.