Published : 06 Nov 2019 01:15 PM
Last Updated : 06 Nov 2019 01:15 PM

தேசிய தலைமை ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு மாநாடு: இந்தித் திணிப்பு முயற்சி; மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

சென்னை

தேசிய தலைமை ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு மாநாட்டில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளைப் பேசுவோரையும் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு, மக்களவை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய மனித வளம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியல் நிஷாங்கிற்கு திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறவிருக்கும் தேசிய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான மாநாட்டில் மாநில மொழிகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

'இந்து தமிழ்' நாளேட்டில் இடம் பெற்றிருந்த செய்தியையும் இத்துடன் அனுப்பியுள்ளேன். அது நவம்பர் 4 ஆம் தேதி சென்னைப் பதிப்பில் இடம் பெற்றுள்ளது. அதில் பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைக்கப்பட்ட இயக்குநர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதியிட்டு ஆசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வீடியோக்களை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நடவடிக்கையில், தமிழ் போன்ற பிற இந்திய மொழிகளை அறிந்துள்ள ஆசிரியர்கள் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளும் உரிமை பறிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை நாட்டின் கூட்டாட்சி முறையின் அமைப்புக்கு எதிரானது. தமிழ் போன்ற பிற இந்திய மொழிகளை அறிந்த ஆசிரியர்களுக்கும் இத்தகைய தேசிய மாநாட்டில் கலந்துகொள்வதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

எனவே, சம்பந்தப்பட்ட தேசிய மாநாட்டினை நடத்தும் தங்கள் மனிதவளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பாளர்களுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து 2020 ஜனவரியில் நடைபெறும் இந்தத் தேசிய மாநாட்டில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளைப் பேசுவோரையும் கலந்துகொள்ள அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x