Published : 06 Nov 2019 12:58 PM
Last Updated : 06 Nov 2019 12:58 PM

திருவள்ளுவருக்கு காவிச் சாயம்; சிலை அவமதிப்பு: வரும் 11-ம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

தொல்.திருமாவளவன்: கோப்புப்படம்

சென்னை

திருவள்ளுவரை முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் சங்பரிவார் கும்பலைக் கண்டிக்கும் வகையில் வரும் 11-ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் இன்று (நவ.6) வெளியிட்ட அறிக்கையில், "திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் தமிழக பாஜகவின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு காவி உடுத்தி, திருநீறு பூசி அவரை இந்து மதத் துறவியாகப் பதிவு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி என்னுமிடத்தில் திருவள்ளுவர் சிலையின் மீது சாணம் வீசி அவமதித்துள்ளனர். இந்த அநாகரிகப் போக்கை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது.

திருவள்ளுவர் சாதி, மதம், மொழி, இனம் மற்றும் தேசம் போன்ற அனைத்து வரம்புகளையும் கடந்தவர். அதற்கு அவருடைய படைப்பான திருக்குறளே சாட்சியமாகும்.

உலகமெங்கும் வாழ்கிற ஒட்டுமொத்த மனித குலத்தையும் எக்காலமும் வழிநடத்தக் கூடிய ஒரு மகத்தான மாந்தநேயக் கோட்பாட்டை உலகுக்கு வழங்கிய உன்னத மகான் திருவள்ளுவர். அவர் மானுடத்திற்கு அருளியிருக்கும் மகத்தான கொடையே திருக்குறள் ஆகும். இதனை அறிஞர்கள் உலகப் பொதுமறை என்று போற்றுகின்றனர். இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானதாக மட்டுமின்றி அனைத்துத் தரப்பினருக்கும் பொருந்தக்கூடியது என்பதால்தான் இதனைப் பொதுமறை என்று போற்றுகிறோம்.

இந்நிலையில் அதனை இந்து அடையாளத்திற்குள் முடக்க முயற்சிப்பதும் அவருடைய திருவுருவச் சிலையை அவமதித்ததும் மிகவும் வெட்கக்கேடான இழி செயலாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மானுட சமத்துவத்திற்காக உரத்துக் குரல் எழுப்பிய மாமனிதரான திருவள்ளுவரைக் காவி உடுத்தி அவமதித்த பாஜகவினர் மற்றும் சாணியடித்து இழிவு செய்த சமூக விரோதிகள் ஆகியோரை தமிழக அரசு உடனடியாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்.

திருவள்ளுவரை முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் சங்பரிவார் கும்பலைக் கண்டிக்கும் வகையிலும், சாதி மத வெறுப்பு அரசியலிலிருந்து தமிழகத்தைக் காக்கும் நோக்கிலும் வரும் நவம்பர் 11-ம் தேதி அன்று தமிழகம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த அறப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளுடன் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்," என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x