Published : 06 Nov 2019 12:48 PM
Last Updated : 06 Nov 2019 12:48 PM

முரசொலி நில விவகாரம்: உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் நிரூபிப்பேன்; தொண்டர்களுக்கு ஸ்டாலின் உறுதி

சென்னை

முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன் என, திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (நவ.6) வெளியிட்ட அறிக்கையில், "2019 மக்களவைத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள், ஜனநாயக விரோத சக்திகளை வீழ்த்திடும் நோக்கில்; தமிழர் நிலத்தில், மத அரசியலுக்கும், அடிமைத்தனத்திற்கும், பணநாயகத்திற்கும் சிறிதும் இடமில்லை என்பதனை, திமுக கூட்டணியை முழுமையாக ஆதரித்ததன் மூலம் உலகத்திற்கு அழுத்தம் திருத்தமாய் உறுதியாய் உணர்த்தினார்கள்.

ஜனநாயகத்தில் தோல்வியடைந்தோர், மக்கள் ஏன் தங்களைப் புறக்கணித்தார்கள் என்றாய்ந்து, மனம் திருந்தி, மக்கள் பணியாற்றி, ஆதரவைப் பெருக்கிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆனால், வெற்றி பெற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும், அடிப்படையில்லாப் பழிச்சொல்லுக்கு ஆளாக்கி, அவதூறுகளைப் பரப்புவதே அவர்தம் ஜனநாயகக் கடமை என்று நினைக்கின்றனர்.

அம்முறையிலேதான், அரசு அதிகாரங்களை முறைகேடாகச் செலுத்தி, மக்களிடையே, திமுகவின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திடவேண்டும் என்று பறக்கின்றனர்.

அவ்வழியில் கருணாநிதியின் மூத்த பிள்ளையாம் முரசொலியின் மீது தொடர்ச்சியான அவதூறு; பஞ்சமி நிலத்தினை வாங்கினோமென்று!

முதலில், ராமதாஸ், கடந்த அக்.17-ம் தேதி அன்று, ஓர் அறிக்கையினை வெளியிட்டார். முரசொலி நிலம் பஞ்சமி நிலமென்றும் குறிப்பிட்டார். அன்றே, அது பச்சைப் பொய்யென்று, பட்டா நகலின் ஆதாரத்துடன் மறுப்பு அறிக்கை தந்தோம். அவர் சொன்னதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்றும்; அப்படி நிரூபிக்கத் தவறினால், அவரும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அறைகூவல் விடுத்தோம். அதன் பின் அங்கிருந்து பதிலில்லை.

மீண்டும் அக்.19-ல் மூலப் பத்திரத்தினைக் காட்டிடவில்லையென்று ஓர் அறிக்கை தந்தார். பொதுவெளியிலும் சரி, நீதிமன்றத்திலும்; குற்றம் சுமத்தியவர்தானே நிரூபித்திட வேண்டும்!

முரசொலி பஞ்சமி நிலமல்ல என்று, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன், யாருக்கும் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம்.

கடந்த அக்.21-ம் தேதி அன்று பாஜக மாநில செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் இதுகுறித்துப் புகார் அளித்தார். தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக தலைமைச் செயலாளருக்கு பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் புகாரின் அடிப்படையில் கடந்த அக்.22-ம் தேதி அன்றே நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அக்.24-ம் தேதி அன்று, பஞ்சமி நிலமாக இருந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்; அதன் உண்மைத்தன்மை ஆராயப்படும் என்று பேட்டியளித்தார்.

கடந்த நவ.4-ம் தேதி அன்று, மீண்டும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு வரும் நவ.19-ம் தேதி அன்று ஆஜராக உத்தரவிட்டிருப்பதாய் செய்திகள் மூலம் அறிந்தேன்; அரசு நிர்வாகத்தில்தான் என்னே ஒரு வேகம்!

2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்த போதும், அண்மையில் சிறுவன் சுஜித் உயிருக்குப் போராடிய போதும், இன்னும் பல்வேறு நிகழ்வுகளிலும், பொது நலன் கருதி, காட்டியிருக்க வேண்டிய வேகம் அது. அது சரி, அதற்காகவா அவர்கள் ஆட்சியிலிருக்கிறார்கள்?

முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது, கருணாநிதியின் மூத்த பிள்ளை மட்டுமல்ல; ஒவ்வொரு திமுக தொண்டனின் உயிர் மூச்சுமாகும். அதன் மீது, கேவலம், தற்காலிகமான அரசியல் லாபத்திற்காக, பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல; திமுகவின் எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.

"முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன்!" என, கருணாநிதியின் உயிரினும் மேலான அன்புத் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இந்த உறுதியே, வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையுமெனக் கருதுகிறேன்," என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x