

புதுச்சேரியிலுள்ள 3 லட்சத்து 31 ஆயிரத்து 624 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.120 கோடியில் இலவச மிக்சி, கிரைண்டர் தரும் பணி இன்று தொடங்கியுள்ளது. படிப்படியாக டிசம்பருக்கும் அனைத்து தொகுதியிலும் வழங்கிவிடுவோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது இலவச மிக்சி, கிரைண்டர், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தனர். நிதி நெருக்கடி உள்பட பல்வேறு பிரச்னைகளால் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தின் போது, மடிக்கணினி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இதன்படி புதுச்சேரி அரசு சார்பில் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா சாரம் அரசு மோட்டார் வாகன பணிமனை வளாகத்தில் இன்று நடந்தது. பேரவைத் தலைவர் எம்.சபாபதி தலைமை வகித்தார். முதல்வர் தொகுதி உட்பட ஆளுங்கட்சி தொகுதிகளான தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திரா நகர் ஆகிய 3 தொகுதிகளைச் சேர்ந்த 300 பயனாளிகளுக்கு மிக்சி, கிரைண்டர்களை தந்து திட்டங்களை தொடக்கி வைத்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
புதுச்சேரியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு அனைத்து அரசு திட்டங்களும் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பது எனது எண்ணமாகும். தேர்தல் வாக்குறுதிகள், பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் அரசு நிறைவேற்றத் தொடங்கி விட்டது.
நிதிச்சுமை உள்ளதால் அரசால் திட்டங்களை செயல்படுத்த முடியாது என பல்வேறு தரப்பினர் கூறிவந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. பெண்கள் எதிர்பார்ப்பின்படி அவர்களுக்கு தரமான பட்டர்பிளை நிறுவன மிக்சி, கிரைண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.
முதல் கட்டமாக 3 தொகுதிகளைச் சேர்ந்த 300 ரேஷன் அட்டைதாரர்களுக்கும், தொடர்ச்சியாக வரும் டிசம்பர் மாதத்துக்குள் 30 தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு படிப்படியாக வழங்கப்படும்.
இத்திட்டப்படி 3 லட்சத்து 31 ஆயிரத்து 624 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 120 கோடியில் இலவச மிக்சி கிரைண்டர் தரப்படுகிறது. மூன்று துறைகள் மூலம் இவை பிரித்து தரப்படுகிறது.
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சிறப்பு கூறு திட்டத்தின் கீழ் 56000 ரேஷன் அட்டைதாரர்களுக்கும், சமூக நலத்துறை மூலம் ரூ.80.77 கோடியில் 2.24 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும், தொழிலாளர் நலத்துறை மூலம் 31600 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மிக்சி, கிரைண்டர் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜவேலு, தியாகராஜன், பன்னீர்செல்வம், பேரவை துணைத் தலைவர் டிபிஆர்.செல்வம், அரசுகொறடா ஜி.நேரு, என்.ஆர். காங்கிரஸ் பொதுச் செயலர் எம்எல்ஏ பாலன், தலைமைச்செயலாளர் மனோஜ் பரிதா, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.