Published : 06 Nov 2019 12:15 PM
Last Updated : 06 Nov 2019 12:15 PM

சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்ற 2 பெண்களைக் கடத்திய மர்ம கும்பல்? பல்லாவரம் போலீஸில் புகார்

சித்தரிப்புப் படம்

சென்னை

இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய பெண்களை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற சுங்கத்துறை அதிகாரிகளிடமிருந்து ஒரு கும்பல் கடத்திச் சென்றதாக பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் தங்கம் தமிழகத்துக்கு கடத்தி வருவதாக எழுந்த புகாரின் பேரில் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் அதிரடி சோதனை நடந்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் நேற்றிரவு இலங்கையிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.

இதில் பெண் பயணிகள் பாத்திமா சபீனா (43), தெரஸா ராமலிங்கம் ((32) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் உடைமைகளில் தங்கம் எதுவும் இல்லை. வயிற்றுக்குள் தங்கம் இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் அவர்களை பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அம்புஜி என்கிற பெண் சுங்க அதிகாரியும் திருப்பதி என்கிற ஆண் சுங்க அதிகாரியும் அழைத்துச் சென்றனர்.

ஆனால் அவர்கள் உடலில் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. பின்னர் இரண்டு பெண்களுடன் வெளியே வந்த சுங்க அதிகாரிகளை ஒரு மர்ம கும்பல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தக் கும்பல் அந்த இரு பெண்களைக் கடத்திச் சென்றதாக சுங்க அதிகாரிகள் தரப்பில் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அங்கு அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகத் தெரியவில்லை. சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது அதில் ஒரு கார் வந்து நிற்பதும் இரு பெண்களும் சாதாரணமாக ஏறிச் செல்வதும் பதிவாகி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சுங்க அதிகாரிகள் புகார் அளித்ததுபோல் நடந்தால் அந்த நேரத்தில் பல்லாவரத்தில் இருக்கும் போக்குவரத்து நெரிசலில் அவர்கள் எளிதாகச் சிக்கி இருப்பார்கள். ஆகவே அப்படி நடக்க வாய்ப்பில்லை என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே இரண்டு பெண்களையும் பல்லாவரம் போலீஸார் மீட்டுவிட்டதாகவும், அவர்களிடம் பல்லாவரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x