

சென்னை
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்களின் மருத்துவ மாணவர் சேர்க்கையை அங்கீகரித்து அவர்களுக்கு வெகுமதி அளிக்கக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த சென்னை மாணவர் உதித் சூர்யா சிக்கினார். இவர்தான் நீட் முறைகேட்டில் முதலில் சிக்கியவர். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் நீட் தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானது. உதித் சூர்யாவைத் தொடர்ந்து ராகுல், பிரவீன், இர்பான் ஆகிய மாணவர்களும் பிரியங்கா என்ற மாணவியும் கைதாகினர்.
இந்நிலையில், நீட் ஆள்மாறாட்டத்தில் சிக்கிய மாணவர்கள் தொடர்ந்து படிக்க மருத்துவக் கல்வி இயக்ககம் எடுத்திருக்கும் நடவடிக்கையை ராமதாஸ் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (நவ.6) தன் ட்விட்டர் பக்கத்தில், "நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து படிக்கவும், தேர்வெழுதவும் வசதியாக அவர்களின் பெயரை பதிவுக்காக மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவக் கல்வி இயக்ககம் அனுப்பி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களின் மருத்துவ மாணவர் சேர்க்கையை அங்கீகரித்து அவர்களுக்கு வெகுமதி அளிக்கக் கூடாது. இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் தங்களை நிரபராதிகள் என்று நிரூபிக்கும் வரை இப்போதைய நிலையே நீடிக்க வேண்டும்," என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.