

செங்கல்பட்டு
பால்ய நண்பரான பாலிடெக்னிக் மாணவரை தனது வீட்டில் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி ஓடிய விஜய், போலீஸார் தேடுவதை அறிந்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்களம் பஜனைக்கோவில் தெரு, பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா (42). இவரது மகன்கள் முகேஷ் (19) மற்றும் லோகேஷ் (18). முகேஷ் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் EEE 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
முகேஷின் நெருங்கிய நண்பர் விஜய் (19). இவர் சகோதரர்கள் உதயா மற்றும் அஜித். சிறுவயது முதல் ஒன்றாகப் பழகிவந்த விஜய்யும் முகேஷும் பால்ய நண்பர்கள். எங்கு போனாலும் ஒன்றாகத்தான் செல்வார்கள்.
முகேஷ், விஜய், உதயா அனைவரும் நல்ல நண்பர்கள் என்பதால் இருவர் வீட்டுக்கும் இரண்டு நண்பர்களும் செல்வது வழக்கம். பக்கத்துத் தெருவில் வசிக்கும் முகேஷ் எப்போதும் விஜய்யின் வீட்டில்தான் இருப்பார்.
நேற்று முகேஷ், நண்பர் விஜய்யைப் பார்க்க அவரது வீட்டுக்கு வந்தார். இருவரும் தனியாக அறைக்குள் இருந்தனர். அஜித் தனது மனைவியுடன் தனி அறையில் இருந்தார். உதயா வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது விஜய்யின் அறையிலிருந்து திடீரென குண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டு அனைவரும் அங்கு ஓடிச் சென்று பார்த்தபோது முகேஷ் நெற்றியில் குண்டடி பட்ட காயத்துடன் கிடந்தார்.
விஜய் தப்பி ஓடிவிட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாழாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விஜய்யைத் தேடி வந்தனர். கொலைக்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை.
இதில் முக்கியமான விஷயமாக போலீஸார் பார்ப்பது விஜய் கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது. துப்பாக்கி சாதாரணமாக ஒரு இளைஞர் கையில் உள்ளது என்றால் அதன் பின் இருக்கும் கும்பல் யார் என போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இரவு முழுவதும் தனிப்படையினர் விஜய்யைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடுவர்முன் விஜய் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி குற்றவியல் நடுவர் உத்தரவிட்டார். விஜய் சரண் அடைந்ததால் தாழாங்குப்பம் போலீஸார் நீதிமன்ற உத்தரவு பெற்று காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
விசாரணையின்போது கொலைக்கான காரணம், துப்பாக்கி எங்கு வாங்கப்பட்டது, விற்ற கும்பல் யார் உள்ளிட்ட பல விஷயங்கள் தெரியவரும்.