

சென்னை
திமுக ஒருநாளும் அனிதாக்களை மறக்காது என, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உதயநிதி நேற்று (நவ.5) வெளியிட்ட அறிக்கையில், "அண்ணா, பெரியார், கருணாநிதி என நம் தலைவர்கள் பண்படுத்திய தமிழ் மண்ணில் சமூக நீதிக்கு எதிரான சித்தாந்தங்கள் கடந்த சில ஆண்டுகளாக முளைவிடத் தொடங்கியுள்ளன. அதுவும் தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பாடசாலைகளின் வழியாக இந்த அநீதிகள் இழைக்கப்படுவதுதான் மிகப்பெரிய கொடுமை.
இதைத் தடுத்து நிறுத்தி நம் தனித்துவத்தைக் காக்க வேண்டிய ஆட்சியாளர்களோ, பூங்கொத்து கொடுத்து அவற்றை வரவேற்கின்றனர். நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான வழக்கில், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்களே அதற்குச் சான்று.
இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 3,081 ஆகும். இதில் 48 மாணவர்கள் மட்டுமே எந்தப் பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல் நேரடியாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்.
மீதமிருக்கும் 3,033 மாணவர்களும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்கள். அதிலும், 1,040 மாணவர்கள்தான் முதல் முயற்சியிலேயே வென்றவர்கள். மீதமுள்ள 2,041 மாணவர்கள் இரண்டாவது, மூன்றாவது முயற்சிகளில்தான் வெற்றி பெற்றுள்ளனர்.
இப்படி சமுக நீதிக்கு எதிராகத் தகுதியற்ற முறையில், நடத்தப்படும் தேர்வு முறைமையைத்தான் தகுதித் தேர்வு என்கிறது அரசு. இந்தத் தேர்வு முறையில் அனிதாக்களுக்கும் பிரதீபாக்களுக்கும் ஏது இடம்? அவர்களால் பயிற்சி வகுப்புகளுக்கென லட்சங்கள் பல செலவு செய்யவும் முடியாது; ஆண்டுகள் பல காத்திருக்கவும் முடியாது.
'தகுதியற்றவர்கள் மருத்துவர்களாகி விடுகிறார்கள்; அதனால்தான் நீட் தேர்வு அவசியம்' என்கின்றனர் தமிழக பாஜக நிர்வாகிகள். அப்படியெனில் கடந்த மாதம் நீட் தேர்வில், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதற்காக, அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனரே ஐந்து மாணவர்கள், அவர்கள் மட்டும் தகுதியானவர்களா?.
இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம். இந்தியத் துணைக்கண்டத்திற்கு சமூக நீதியை கற்றுக்கொடுத்த சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்த திமுகவின் ஆட்சி மலரும் நாளில் நீட் தேர்விலிருந்து விலக்கு உறுதி.
திமுக ஒருநாளும் அனிதாக்களை மறக்காது. ஏனெனில் திமுக அனிதாக்களுக்காக உருவாக்கப்பட்டது. அனிதாக்களால் உருவாக்கப்பட்டது," என உதயநிதி தெரிவித்துள்ளார்.