ஈக்களை ஒழிக்க செர்ரி ஒட்டுண்ணிப் பூச்சிகள் அறிமுகம்: மதுரை மாநகராட்சியில் பரிசோதனை முயற்சி
ஒய். ஆண்டனி செல்வராஜ்
மதுரை
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பலவித நோய்களைப் பரப்பும் காரணி களான ஈக்களை அடியோடு ஒழிக்க, மதுரை மாநகராட்சியில் தமிழகத்திலேயே முதல் முறையாக ‘டெட்ராஸ்டைகஸ் கொவார்டி’ என்ற செர்ரி பயோ கண்ட்ரோல் உயிரியல் ஒட்டுண்ணி பூச்சிகள் ஈரப்பதமுள்ள கழிவுநீர், குப்பைகள் தேங்கும் பகுதிகளில் பரிசோதனை முறையில் விடப்படுகின்றன.
ஈக்களால் நோய்களை பரப்பும் 600 வகையான பாக்டீரி யாக்கள் மனிதர்களுக்கு பரவுவதாக அமெரிக்காவின் ‘பென்சில் வேனியா ஸ்டேட் பல்கலைக் கழகம்’ ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. ஈக்கள், அவற்றின் கால்கள், இறக்கைகள், ரோமங்கள் மூலம் பாக்டீரியாக்களை கடத்துகின்றன.
சாக்கடைக் கழிவு நீர், குப்பைகள், அழுகியப் பொருட்கள் உள்ளிட்டவை தேங்கும் சுகாதாரக் கேடான இடங்கள்தான் ஈக்க ளுடைய இருப்பிடம். ஈக்கள், அந்த இடங்களில் அமர்ந்துவிட்டு மனிதர்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவுப் பொருள் மீதும் அமர்ந்து விடுகின்றன. ஈக்கள்தானே என்று அலட்சியமாக அவை அமர்ந்திருந்த உணவையும், தின்பண்டங்களையும், பழங் களையும் சாப்பிடுகிறோம். ஆனால், அந்த ஈக்களின் கால்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் சாப்பாட்டுடன் நமது உடலுக்குள் சென்று நோய்களை பரப்புகின்றன. கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் இந்த நிகழ்வுகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டைஃபாய்டு, காலரா, நிமோனியா, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
கழிவுகள் இருக்கும் இடம்தான் ஈக்களின் இருப்பிடம். அதனால் வீடுகள் மற்றும் நாம் பணிபுரியும் அலுவலகங்களை சுற்றிலும் கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் மழைநீர், கழிவுநீர், குப்பைகள் உடனுக்குடன் வெளியேறு வதற்கான அடிப்படை வடிகால் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு வசதி கள் இல்லாத கிராமங்களை உள்ள டக்கிய, மதுரை போன்ற நகரங் களில் ஈக்களால் பரவும் நோய் களும், அதன் தொந்தரவும்அதிகம்.
ஒருபுறம் கொசுக்கள் ‘டெங்கு’ உள்ளிட்ட நோய்களை பரப்புகிறது என்றால், மற்றொருபுறம் அதை விட அதிகமான நோய்களை ஈக்கள் பரப்புகின்றன. அதனால், ஈக்களை அழிக்க நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளை சுகா தாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
உயிரியல் ஒட்டுண்ணி
அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி, தற்போது நோய்களை பரப்பும் ஈக்களை அழிக்க ‘டெட்ராஸ்டைகஸ் கொவார்டி’ என்ற செர்ரி பயோ கண்ட்ரோல் உயிரியல் ஒட்டுண்ணி பூச்சிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பூச்சிகளின் முட்டைகளை கழிவுநீரும், குப்பைகளும் உள்ள ஈரப்பதம் உள்ள இடங்களில் தூவி வருகின்றனர். இந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் உயிரியல் ஒட்டுண்ணி பூச்சிகள், ஈக்களின் முட்டைகளை தின்று அழிக்கின்றன. இந்த பரிசோதனை முயற்சி வெற்றிப் பெற்றதால் நேற்று ஒரே நாளில் 30 லிட்டர் ‘டெட்ராஸ்டைகஸ் கொவார்டி’ பூச்சி முட்டைகளை கழிவுகள் தேங்கும் இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் தூவினர்.
10 நாட்கள் மட்டுமே உயிர் வாழும்
மாநகர் சுகாதாரத் துறை ஆய்வாளர் ஓம்சக்தி கூறியதாவது: நகர் பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் பொது இடங்கள், கழிவுநீர் கால்வாய்கள், பொது சுகாதாரக் கழிப்பறை வளாகங்களில் ஈக்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றன. இந்த இடங்களில், ‘செர்ரி’ பயோ கண்ட்ரோல் திட்டத்தை தொடங்கி உள்ளாம். இந்தத் திட்டத்தில் ‘டெட்ராஸ்டைகஸ் கொவார்டி’ பூச்சி முட்டைகளை ஈக்கள் தொந்தரவு அதிகமுள்ள இடங்களில் தூவி விடுகிறோம். இந்த முட்டைகள் 24 மணி நேரத்தில் வெடித்து பூச்சிகள் உருவாகி, அவை ஈக்கள் இடும் முட்டைகளை சாப்பிடுகின்றன. ஒவ்வொரு ஈக்களும் சாதாரணமாக ஒருமுறை 150 முட்டைகள் இடும். இந்த முட்டைகளை மருந்தடித்து அழிப்பது சவாலானது. அதனால், இந்த உயிரியல் ஒட்டுண்ணி பூச்சிகள் விரைவாக அழிக்கின்றன. இந்த ‘டெட்ராஸ்டைகஸ் கொவார்டி’ பூச்சிகள், 10 நாட்கள் வரைதான் உயிர் வாழும். அதன்பிறகு அவை இறந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
