Published : 06 Nov 2019 10:22 AM
Last Updated : 06 Nov 2019 10:22 AM

58,500 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு: பிசான பருவ பணிகளை தொடங்கிய நெல்லை விவசாயிகள்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் இவ்வாண்டு பிசான பருவத்தில் 58,500 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பரவலாக மழை பெய்து வருவதால் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கார், பிசானம், கோடை என்று 3 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த ஆண்டுகளில் பெய்யும் மழையை பொருத்து இந்த சாகுபடியில் மாற்றம் காணப்படுகிறது. கடந்த ஆண்டில் பிசான பருவத்தில் 54,100 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போதிய மழை பெய்திருந்ததால் இந்த இலக்கை மிஞ்சி நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இவ்வாண்டு கார் பருவத்தில் 10 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறையால் 2,785 ஹெக்டேரில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

உழுது பண்படுத்தும் பணி

தற்போது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பிசான சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி யுள்ளனர். திருநெல்வேலியைச் சுற்றியுள்ள இடங்களில் விவசாய நிலங்களை உழுது பண்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட் டுள்ளனர். ஒருசில இடங்களில் நாற்றங்கால்கள் உருவாக்கப்பட் டிருக்கின்றன. பிசான பருவத் தில் 58,500 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருப்பதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. போதிய அளவு மழை பெய்தால் இந்த இலக்கை மிஞ்சி நெல் சாகுபடி இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதேநேரத்தில் மழையால் சேதங்களும் ஏற்படும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விதை நெல் தட்டுப்பாடு

இதுகுறித்து கருப்பந் துறையைச் சேர்ந்த விவசாயி க.தம்புரான் கூறியதாவது:

கடந்த ஆண்டு பிசான பருவத்திலும், இவ்வாண்டு கார் பருவத்திலும் இப்பகுதியில் நெல் விவசாயம் நடைபெறவில்லை. தற்போது மழை பெய்து வருவதாலும், திருநெல்வேலி கால்வாயிலிருந்து தண்ணீர் கிடைப்பதாலும் இப்பகுதியில் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். கடந்த வாரத்தில் நிலத்தை உழுது பண்படுத்தும் பணிகள் நடைபெற்றன. நாற்றங்கால்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் 20 நாட்களில் நடவு பணிகள் தொடங்கும். விதை நெல் தட்டுப்பாடு இருக்கிறது. அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும். பிசான பருவத்தில் மழையிலிருந்து தப்பித்தால் சாகுபடி நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x