ஆழ்துளை கிணறு குறித்து புகார் தெரிவித்த இளைஞரிடம் கோபமாக பேசியது கரூர் ஆட்சியரா? - வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரூர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில் 1,930 ஆழ்துளைக் கிணறுகள் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளன. இதில், 558ஆழ்துளைக் கிணறுகள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கரூர் மாவட்டம் செம்பியநத்தத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனை தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்கள் பகுதியில் மூடப்படாத நிலையில் ஆழ்துளைக் கிணறு உள்ளதாக புகார் தெரிவிக்க, அதற்கு ஆட்சியர் பதிலளித்ததாக கூறப்படும்உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொலைபேசியில் பேசிய இளைஞர், ‘தான் செம்பியநத்தத்தில் இருந்து பேசுவதாகவும், போர்வெல் குழி மூடப்படாமல் உள்ளது என்றும், அது எந்த பகுதி என்றும் தெரிவிக்கிறார். இதுகுறித்து, மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் விழுந்தபோதே தெரிவித்ததாகவும், இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை' என்றும் கூறுகிறார்.

அதற்கு, “அங்கு பிடிஓ என ஒருவர் இருக்கிறார். அவரிடம் பேசுவது தரக்குறைவு எனநினைக்கிறீர்களா?, நேரில் சென்று பார்த்தீர்களா?, எப்போது பார்த்தீர்கள்?. அவ்வளவு அக்கறை இருப்பவர் நேரில் சென்று பிடிஓவிடம் சொல்லுங்கள். சரவணபவன் சர்வர் என நினைத்தீர்களா கலெக்டர்களை? போனை வை ராஸ்கல்” என மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் பேசியதாக அந்த உரையாடல் உள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஆடியோ பதிவில் உள்ளது தனது குரல் இல்லை என மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனை தொடர்புகொள்ள முடியவில்லை.

ஜெ.ராதாகிருஷ்ணன் பதில்இதுகுறித்து, அரசு முதன்மைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் திருச்சியில் கூறும்போது, "மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் குறித்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறையை '1077' என்ற எண்ணிலும், மாநில கட்டுப்பாட்டு அறையை '1070' என்ற எண்ணிலும் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களையும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். படம் எடுத்து அனுப்பும்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

புகார், குறைகளை உள்வாங்கிக்கொண்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பல நேரங்களில் தவறான செய்திகள், வாட்ஸ்அப்பில் வெளியாகின்றன. மூடப்படாத ஆழ்துளைக் கிணறு தொடர்பாக புகார் கூறியவரிடம் கரூர் மாவட்ட ஆட்சியர் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ குறித்து விசாரிக்கப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in