5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: கல்வித் துறை அறிவுறுத்தல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

பொதுத் தேர்வை எதிர்கொள்ள 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுத்தேர்வில் 3 பருவ பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. மாணவர்களின் தரமதிப்பீட்டை அளவிடும் விதமாக பொதுத்தேர்வு நடத்தப்படும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் தோல்வி அடைபவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், அனைத்து வட்டாரக்கல்வி அலுவலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: இந்த கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ளதை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்க வேண்டும். பொதுத்தேர்வில் 3 பருவ பாடப்புத்தகத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும். எனவே, 3 பருவ பாடக் கருத்துகளையும் அவ்வப்போது சிறுதேர்வுகள், செயல்தாள்கள் மூலம் ஆசிரியர்கள் மீள்பார்வை செய்ய வேண்டும்.

மாவட்ட வாரியாக திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்படும். அதற்கேற்ப மாணவர்களை ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in