Published : 06 Nov 2019 09:59 AM
Last Updated : 06 Nov 2019 09:59 AM

நெல் அறுவடை முடிந்ததும் வைக்கோலை எரிக்காமல் பேப்பர் தயாரித்தால் டெல்லியில் காற்று மாசை தடுக்கலாம்: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் யோசனை

சென்னை

நெல் அறுவடைக்கு பிறகு கிடைக்கும் வைக்கோலை பயன்படுத்தி காட்போர்டு, பேப்பர் போன்ற பொருட்கள் தயாரிக்க விவசாயிகளை ஊக்குவித்தால், டெல்லியில் காற்று மாசு தவிர்க்கப்படும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் யோசனை தெரிவித்தார். சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பண்ணை செயலி மற்றும் ஜியோ அக்ரி இணையதளம் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இதில் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும், வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதன் கலந்துகொண்டு பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் நெல் அறுவடைக்கு பிறகு கிடைக்கும் வைக்கோலை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்துகிறோம். அதுபோக நிலத்தில் மிஞ்சி இருப்பதை உரமாக மாற்றிவிடுகிறோம். அதனால் தமிழகத்தைப் பொறுத்தவரை, நிலத்தில் வைக்கோல் எரிக்கப்படுவது இல்லை.

ஆனால், பஞ்சாப், ஹரியாணா போன்ற வட மாநிலங்களில் நெல் வயலிலேயே வைத்து வைக்கோலை எரிக்கின்றனர். இதனால் காற்று மாசு ஏற்படுகிறது. இதற்காக விவசாயிகளை குறைகூறவோ, அவர்களுக்கு அபராதம் விதிப்பதோ கூடாது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துதர வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு மியான்மர் நாட்டில் இந்தியாவுடன் இணைந்து ‘பல்ப் பயோ பார்க்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், வைக்கோலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் காட்போர்டு, பேப்பர் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கிறது.

அதுபோன்ற ஏற்பாட்டை வட மாநில விவசாயிகளுக்கு அரசு செய்துதர வேண்டும். வட மாநில விவசாயிகளும் வைக்கோலை எரிப்பதற்கு பதிலாக, அதில் இருந்து காட்போர்டு, பேப்பர் போன்ற பொருட்களைத் தயாரிக்கலாம். வருமானம் கிடைப்பதால் விவசாயிகளும் வைக்கோலை எரிக்கமாட்டார்கள். காற்று மாசு தவிர்க்கப்படும்.

டெல்லியில் வசதியானவர்களின் வீடுகளில் பல வாகனங்கள் உள்ளன. அங்கு காற்று அதிகம் மாசுபடுவதற்கு இதுவே காரணம். நாட்டில் வளம் குன்றா வேளாண்மை நீடித்து நிலைப்பதற்கு விவசாயிகள் அனைவரும் உழவுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் விவசாய வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.

தமிழகத்தில் ஒப்பந்த சாகுபடி திட்டம் கொண்டுவந்திருப்பது வரவேற்கத்தக்கது. விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.

விழாவில் கலந்துகொண்ட வருவாய், பேரிடர் நிர்வாகத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு போன்ற நிலை தமிழகத்தில் இல்லை’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x