Published : 06 Nov 2019 09:06 AM
Last Updated : 06 Nov 2019 09:06 AM

‘மண்டி ’ விளம்பரத்தில் நடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை: வணிகர்கள் கைது

சென்னை

நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வணிகர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

மளிகை பொருட்களை இணையம் மூலம் பெறும் ‘மண்டி’ என்னும் செல்போன் செயலி விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த செயலி வணிகர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இருப்பதாக கூறி விஜய் சேதுபதிக்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். விஜய்சேதுபதியை கண்டித்து அவரது அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து திட்டமிட்டபடி சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், ராஜேந்திரன் தெருவில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட அந்த அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் நேற்றுகாலை ஊர்வலமாக வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து அப்புறப்படுத்தினர்.

போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி, ‘‘இந்தசெயலியால் 20 லட்சம் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த செயலியின் விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளது வேதனையளிக்கிறது. அவர் இந்த செயலியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவரது திரைப்படம் வெளியாகும்போது திரையரங்கை முற்றுகையிட்டு போராடுவோம்’’ என்றனர்.

இதுகுறித்து ‘மண்டி’ செயலி அளித்துள்ள விளக்கத்தில், ‘‘உணவு பொருட்கள் வணிகத்தில் பங்குதாரர்கள் - விவசாயிகள், வர்த்தகர்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அனைவரையும் ஒரே தளத்தின் மூலம்‘மண்டி’ இணைக்கிறது.

விவசாயிகள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறைவிற்பனையாளர்களுடன் ஒன் றரை ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சிகளுடன் தொடர்புகொண்ட பின்னர் தொழில்துறையின் நலனுக்காக இந்த செயலிதொடங்கப்பட்டுள்ளது. ‘மண்டி’மற்றும் விஜய் சேதுபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x