

சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்ததாக தனியார் மருத்துவமனை ஊழியர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணி புரியும் இளம் பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலைய போலீஸாரிடம் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது: எனது புகைப்படத்தை முகநூலில் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்து வைத்துள்ளார். அவரை கைது செய்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டஎனது புகைப்படத்தை முகநூல் பக்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஈஸ்வரன், உதவி ஆணையர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்த முகநூல் பக்கம்போலியான பெயரில் உருவாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் பெரிய காஞ்சிபுரம், மல்லிகை தெருவைச் சேர்ந்த முகமது கயாஸ் (27) என்ற இளைஞர்தான் போலி முகநூல் பக்கத்தைஉருவாக்கி இருப்பதும், அவர் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திட்ட அதிகாரியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் நேற்றுமுன்தினம் அவரைக் கைது செய்தனர். பின்னர், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். முன்னதாக ரியாஸின் செல்போன் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து அவற்றை ஆய்வு செய்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசபடங்கள் இருந்ததை பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘முகம்மது கயாஸ் திருவல்லிக்கேணியில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியுள்ளார். இவர், தனது அலுவலகத்தில் உள்ள பெண் ஊழியர்களின் படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். அதைப் பார்த்து பலரும் அவருக்கு லைக் மற்றும் கமென்ட் கொடுத்துள்ளனர். இதன்மூலம், அவரது முகநூலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, தன்னுடன் குடும்பம் நடத்தும் இளம்பெண், அவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் படங்களையும் அவ்வப்போது ஆபாசமாக சித்தரித்து போலியான பெயரில் முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். இதோடு மட்டுமல்லாமல், அவர் பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது பேருந்து, ரயில் நிலையம், சந்தைப் பகுதி, முக்கிய வீதிகளில் நடந்து செல்லும் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் படம் எடுத்து உள்ளார். பின்னர், அவற்றை ஒவ்வொன்றாக மார்பிங் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அவர் பதிவேற்றம் செய்துள்ள ஆபாச புகைப்படங்களை தற்போது அழித்து வருகிறோம். கயாஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைத் துள்ளோம்’’ என்றனர்.