

தஞ்சாவூர்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1034- வது ஆண்டு சதய விழா நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியாக டிகேஎஸ். பத்மநாபன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, களிமேடு அப்பர் குழுவினரின் திருமுறை அரங்க நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்ச்சிகளுக்கு சதய விழாக் குழுத் தலைவர் துரை.திருஞானம் வரவேற்றார். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர் சி.அனந்தராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவுக்குத் தலைமை வகித்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை பேசியபோது, "தஞ்சாவூருக்கு வடக்கில் காவிரி உள்ளிட்ட பல ஆறுகள் செல்வதால் அந்த நிலப்பகுதியைத் தவிர்த்து முழுவதும் பாறைப் பகுதியைக் கொண்ட இந்த இடம் தேர்வு செய்யப்பட்டு பெரிய கோயில் கட்டப்பட்டுள்ளது.
ராஜராஜ சோழன், தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் 1004-ம் ஆண்டு தொடங்கி 1010 -ம் ஆண்டு இந்த கோயிலை கட்டி முடித்துள்ளார். ஆறே ஆண்டுகளில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், மேட்டூர் அணைக்கு இடம் தேர்வு செய்வதில் தொடங்கி, சுமார் 90 ஆண்டுகள் கழித்துதான் அங்கு ஆங்கிலேயர்கள் அணை கட்டினர்.
ராஜராஜசோழன் ஒரு பேரரசன் என்பதைக்காட்டிலும் அவர் ஒரு பல்கலை வித்தகர், அவர் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு துறையிலும் ஒரு பேரறிஞராக, விஞ்ஞானியாக திகழ்ந்துள்ளார். பல கலைகளையும் அறிந்தவராக அவர் இருந்துள்ளார்.
இந்தக் கோயிலை நாம் மேலும் போற்றிப் பாதுகாக்க ஏதுவாக இக்கோயில் கட்டப்பட்ட முறை, வரைபடம் ஆகியவற்றை செப்புத் தகடுகளாக செதுக்கி அவற்றை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்த கோயிலின் புகழ் போல, மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழ் இந்த உலகம் உள்ளவரை நீடிக்க வேண்டும்’’ என்றார். தொடர்ந்து கருத்தரங்கம், திருமுறை இன்னிசை, பட்டிமன்றம் ஆகியன நடைபெற்றன.
விழாவையொட்டி, பெரிய கோயில் மற்றும் ராஜராஜ சோழனின் சிலை ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெருவுடையார் சமேத பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவின் 2-வது நாளான இன்று (நவ.6) ராஜராஜ சோழனின் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. தொடர்ந்து இசைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம், பெரிய கோயில் கட்டுமான முறை குறித்த ஒலி- ஒளி காட்சி ஆகியன நடைபெறவுள்ளன.