

சென்னை
பள்ளிக்கரணை பெரும்பாக்கத்தில் டாஸ்மாக் கடை அருகே மது அருந்திய 2 பேர் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களுக்கு குற்றச் சம்பவப் பின்னணி எதுவும் இல்லாத நிலையில் யார் கொலை செய்தது என திணறிய போலீஸார் 20 நாட்களுக்குப் பின் கொலையாளிகளைக் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரும்பாக்கம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆனந்த் (23). இவரது உறவினர் ஸ்டீபன் (23). மற்றும் இன்னொரு நண்பரும் சேர்ந்து கடந்த 14-ம் தேதி இரவு 11 மணியளவில் அதே பகுதியில் உள்ள ஆனந்தா நகர் டாஸ்மாக் கடை அருகே ஆட்டோவில் உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, அங்கு வந்த கும்பல் ஆனந்த் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரையும் பட்டாக்கத்திகளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினர்.
ஸ்டீபன் மற்றும் ஆனந்துடன் அமர்ந்து மது அருந்திய 3-வது நபர் தப்பி ஓடிவிட்டார். ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனந்த் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியானார். இந்த வழக்கில் பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
ஸ்டீபன் ஆட்டோ ஓட்டுநர். ஆனந்த் லாரி கிளீனர். இருவருக்கும் எந்தவித முன்விரோதம் யாருடனும் இல்லை. இருவரும் தானுண்டு தன் தொழில் உண்டு என்று வாழ்ந்துள்ளனர். கொலைக்கான உள்நோக்கம் இல்லாத நிலையில் சாதாரண நபர்களான ஸ்டீபன் மற்றும் ஆனந்த் கொலையில் கடந்த 20 நாட்களாக போலீஸார் துப்பு துலக்குவதில் மிகுந்த சிரமப்பட்டனர்.
தனிப்படை அமைக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் ஒரு இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சியில் 3 பேர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி சிக்கியது. அதை பல்வேறு காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரித்தபோது ஒரு துப்பு கிடைத்தது.
அதில் உள்ள இரண்டு நபர்கள் ராகவ் (26) மற்றும் வேலு (26) எனத் தெரியவந்தது. திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அவர்கள் ஐஸ் ஹவுஸ் காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் பழிக்குப் பழி வாங்க கடந்த மாதம் 10-ம் தேதி எழும்பூர் நீதிமன்றம் சென்று ஆட்டோவில் திரும்பிய குள்ள சேகர் மனைவி மற்றும் மகனைக் கொல்ல முயன்ற கூலிப்படை கும்பலில் இருந்தவர்கள் என்பதும் , தப்பி ஓடிய அவர்கள் 18-ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையிலிருப்பதாகவும் சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் தெரிவித்தனர்.
காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி
இதை வைத்து அவர்களது கூட்டாளி ரமேஷ் என்பவரை போலீஸார் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் “கடந்த 10-ம் தேதி குள்ள சேகர் மகனைக் கொல்ல முயன்றபோது அவர் பாம் வீசியதால் முயற்சி தோல்வி அடைந்து தப்பி ஓடிய வேலு மற்றும் ராகவ் இருவரும் என்னைத்தேடி பள்ளிக்கரணை வந்தார்கள். என்னுடன் தங்கி இருந்தார்கள்.
அக்.14-ம் தேதி வேலு மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரில் வந்த ஸ்டீபன், ஆனந்தின் மோட்டார் சைக்கிளில் உரசி ஒரு ஆட்டோ மீது மோதியுள்ளார். அதில் மூவருக்கும் வேலுவுக்கும் தகராறு ஏற்பட ஆட்டோ ஓட்டுநர் வேலுவை அடித்துவிட்டார். அந்தக் கோபத்தில் வேலு எங்களிடம் வந்து விஷயத்தைச் சொல்ல, நாங்கள் அங்கு சென்றோம். அங்கு ஸ்டீபனும், ஆனந்தும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
வேலு அடையாளம் காட்ட, மூன்று பேரும் பட்டாக்கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டோம்” என்று ரமேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ரமேஷின் வாக்குமூலத்தைப் பெற்ற தனிப்படையினர் பின்னர் புழல் சிறைக்குச் சென்று வேலு, ராகவ் இருவரிடமும் விசாரணை நடத்தியதில் அவர்கள் கொலை செய்தது உறுதியானது.
ஒரு துப்பும் கிடைக்காத கொலையில் 20 நாட்களாக சிசிடிவி காட்சியை மட்டும் வைத்து துப்பு துலக்கி 3 கொலையாளிகளைப் பிடித்த தனிப்படையினரை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர். இந்தக் கொலையில் ஏற்கெனவே சிறைக்குள் இருக்கும் வேலு, ராகவ் இருவரையும் போலீஸார் சேர்ப்பார்கள். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிப்பார்கள்.