

சென்னை
தனது பிறந்த நாளுக்கு பரமக்குடி வருவதாகத் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் அந்த நேரத்தில் பேனர், பிளக்ஸ், கொடி எதுவும் வைக்கக்கூடாது, சால்ஜாப்பு சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்.12 அன்று அதிமுக பிரமுகர் இல்லத் திருமணத்தின்போது வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் விழுந்ததில் சாலையில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் லாரியில் சிக்கி உயிரிழந்தார். தமிழகத்தை உலுக்கிய இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இன்னும் எத்தனை உயிர் பலி வேண்டும் எனக் கேட்டது.
தாங்கள் பேனர் வைக்கமாட்டோம் என திமுக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. மற்ற கட்சிகளும் தாக்கல் செய்த நிலையில் அதிமுகவும் பேனர் வைக்கமாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும் பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்படவேண்டும் என கடுமையாகக் கண்டித்திருந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன் பிறந்த நாள் இந்த மாதம் 7-ம் தேதி வருகிறது. அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகியுள்ளன. தனது பிறந்த நாள் அன்று சொந்த ஊரான பரமக்குடிக்கு கமல் செல்கிறார். இதையடுத்து ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் யாரும் பிளக்ஸ், பேனர், கொடிகள் வைக்கக்கூடாது என கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று கமல் வெளியிட்டுள்ள அறிக்கை:
“நாளை மறுநாள் (7/11/2019) எனது பிறந்த நாள் அன்று, பரமக்குடியில் எனது தந்தையார் அய்யா D. சீனிவாசனின் திருவுருவச் சிலையினைத் திறக்கவுள்ளோம் என்பதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.
அப்பொழுது என்னை வரவேற்க வருகின்ற நண்பர்கள், தொண்டர்கள் மற்றும் ரசிகப் பெருமக்கள் எவ்விதத்திலும் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையில் பேனர்கள், ஃப்ளக்ஸ் மற்றும் கொடிகள் போன்றவற்றைக் கட்டாயம் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்விஷயத்தில் எவ்விதக் காரணங்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எந்நிலையிலும் சமரசங்கள் செய்து கொள்ளப்பட மாட்டாது என்பதை மிகவும் கண்டிப்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
இனி நிகழவிருக்கும் அரசியல் மற்றும் ஆட்சி முறைகளில் மக்கள் நீதி மய்யம் கொண்டு வரவிருக்கும் மாற்றங்களை நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
அனைவரும் ஆவன செய்வீராக, நாளை நமதே”.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.