

விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நாளை (நவ.6) தொடங்கும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில் 644 பெண்கள் உள்பட 2,229பேர் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் என 8,826 காலிப் பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் 5 இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வுக்கு ஒரு திருநங்கையும் 12,451 ஆண்களும், 2,118 பெண்களும் என 14,570 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 10,618 ஆண்களும், 1,658 பெண்களும் முனீஸ்வரி என்ற திருநங்கையும் என 12,277 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில், பெண்கள் உள்பட 644 பெண்கள் உள்பட 2,229 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்தகுதித் தேர்வு நாளை தொடங்குகிறது. விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெறும் உடல் தகுதித் தேர்வில் நாளை (நவ.6) ஆண்களுக்கும், தொடர்ந்து 7-ம் தேதி பெண்களும் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் வெற்றிபெறுவோர் அடுத்தடுத்த சுற்றுகளில் அனுமதிக்கப்படுவர். இம்மாதம் 12-ம் தேதி வரை உடல் தகுதித் தேர்வுகள் நடைபெறும்.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் சீருடைப் பணியாளர் பணிக்கான உடற்தகுதித் தேர்வு நடைபெறுவதைக் கண்காணிக்க காவலர் பயிற்சி பள்ளி டிஐஜி சத்தியபிரியா மற்றும் சிறைத்துறை டிஐஜி பழனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இவரும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனிடம் நேற்று ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து, சென்னையிலிருந்து டிஜிபி தலைமையில் காணொலி மூலம் ஆலோசனைகளும் தேர்வு தொடர்பான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.