Published : 05 Nov 2019 11:33 AM
Last Updated : 05 Nov 2019 11:33 AM

ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்: தமிழகத்தில் 34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,727 கோடி நிதி பயனாளிகள் பட்டியலை வெளியிட விவசாயிகள் வலியுறுத்தல்

டி.செல்வகுமார்

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் ‘பிரதமர் விவசாயி ஆதரவு நிதி’ திட்டத்தின்கீழ் இதுவரை 34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,727 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் விடுபட்டவர்களை சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்படுவதாகவும் வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணையாக ரூ.6 ஆயிரம் வழங்கும், ‘பிரதமர் விவசாயி ஆதரவு நிதி’ திட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிரதமர் மோடியும் தமிழகத்தில் முதல்வர் பழனிசாமியும் தொடங்கி வைத்தனர். முதலில் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமாக தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் விவசாயம் செய்யும் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் உயர் வருவாய் பெறும் விவசாயிகள், கோயில் நிலம் வைத்திருப்போர், விவசாய குடும்பத்தில் உள்ளவர்களில் யாராவது முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மேயர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், துறைகள், அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றோர், உள்ளாட்சித் துறையில் பணியாற்றுவோர் அல்லது ஓய்வு பெற்றோர், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர், வருமான வரி செலுத்துவோர், மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர், கணக்கு தணிக்கையாளர், பதிவு பெற்ற கட்டிடக் கலை நிபுணர்கள் ஆகியோர் பயன்பெற முடியாது.

இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இத்திட்டத்தின்கீழ் இதுவரை 34 லட்சம் விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.1,727 கோடி செலுத்தப்பட்டுள்ளது. விடுபட்ட ஒரு லட்சம் விவசாயிகளை இத்திட்டத்தில் சேர்க்க கிராமங்களில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. சிறப்பு முகாம்இதன்மூலம், இதுவரை 26 ஆயிரம் விவசாயிகள் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 74 ஆயிரம் விவசாயிகள் வரும் 8-ம் தேதி வரை நடக்கும் சிறப்பு முகாமில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவைப்பட்டால் முகாம் தேதி நீட்டிக்கப்படும். இத்திட்டத்தில் www.pmkisan.

gov.in என்ற இணையதளம் மூலமாகவோ இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது வேளாண்மைத் துறையின் வட்டார உதவி இயக்குநர் வாயிலாகவோ விவசாயிகள் சேரலாம்" என்றார்.

பட்டியலை வெளியிட வேண்டும்இதுதொடர்பாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, “தகுதியுள்ள விவசாயிகளை இத்திட்டத்தில் சேர்க்கவில்லை. எனவே தகுதியான விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும் வகையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்கள் தாமாக முன்வந்து திட்டத்தில் சேரும் நிலையை உருவாக்க வேண்டும். இதை ஒரு இயக்கமாக வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த வேண்டும். இதுவரை நிதியுதவி பெற்ற விவசாயிகளின் பட்டியலை கிராமம் வாரியாக வெளியிட வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x