

நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்று மாயமானதாக கூறப்பட்ட மீனவர்கள் பத்திரமாக இருக்கும் தகவல் கிடைத்துள்ளது.
அரபிக்கடலில் உருவான க்யார் மற்றும் மஹா புயல் எச்சரிக்கையால் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 750-க்கும்மேற்பட்ட விசைப்படகுகள் கோவா, மஹாராஷ்டிரா, குஜராத்,கர்நாடகா, கேரள மீன்பிடி துறைமுக பகுதிகளில் கரைசேர்ந்தன. ஆயினும் 8 விசைப்படகுகள் கரை திரும்பாததால், அப்படகுகளில் சென்ற 105 மீனவர்களின் உறவினர்கள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் லட்சத்தீவு ஆழ்கடல் பகுதியில் இருந்து இரு படகுகளுடன் அதில் இருந்த 27 மீனவர்கள் தேங்காய்பட்டணம், கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் கரை சேர்ந்தனர்.
மேலும் 6 படகுகள் மற்றும் அதில் உள்ள 78 மீனவர்களும் கர்நாடக மாநிலம் மங்களாபுரம் பகுதியில் இருந்து 200 நாட்டிக்கல் மைல் தொலைவில் பத்திரமாக மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலை இந்திய கடல் மீட்பு குழு உறுதிசெய்துள்ளது. மீனவர்களை கரைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.