அடுத்த அறிவிப்பு வரும்வரை காவலர்களுக்கு விடுப்பு கிடையாது: டிஜிபி திரிபாதி திடீர் உத்தரவு

அடுத்த அறிவிப்பு வரும்வரை காவலர்களுக்கு விடுப்பு கிடையாது: டிஜிபி திரிபாதி திடீர் உத்தரவு
Updated on
1 min read

சென்னை

அடுத்த அறிவிப்பு வரும்வரை வரும் 10-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காவலர்களின் விடுப்பு ரத்து செய்யப்படுவதாக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி நேற்று ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில், ''வரும் 10-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை எவ்வித விடுமுறையும் கிடையாது. காவல் துறையினர், சிறப்புப் பிரிவுகளில் செயல்படுபவர்கள் அனைவரையும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் அணி திரட்டுவது போன்று அணி திரட்டி தயார் நிலையில் அனைத்து அணிகளையும் வைத்திருக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் இதேபோன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் அந்தந்த மாநிலங்களில் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. உ.பி யிலும் அம்மாநில டிஜிபி இதேபோன்று உத்தரவிட்டுள்ளார்.

நீண்ட ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில் தீர்ப்பை நவம்பர் 17-ம் தேதி அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் பதற்றமான சூழ்நிலை எழுந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் காவல் துறையினரை தயாராக வைத்திருக்கும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விடுமுறையை ரத்து செய்தும், புதிதாக விடுமுறை அளிக்காமல் இருக்கும்படியும் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அனைத்துப் பிரிவு டிஜிபிக்களுக்கும், ஏடிஜிபிக்கள், அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in