

சென்னை
மோசமான வானிலை காரணமாக சென்னையில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இது மேலும் 2 நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடும் காற்று மாசு நிலவி வருகிறது. அதனால் பள்ளிகளுக்கு அங்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோன்று தற்போது சென்னையிலும் காற்றுமாசு அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே சென்னையில் காற்று மாசு அதிகமாக உள்ளது. பனிப்பொழிவு ஏற்பட்டது போன்றுகாட்சியளிக்கிறது. அதன் காரணமாக காட்சியில் தெளிவின்மை ஏற்பட்டுள்ளது.
இரவில் பயணிக்கும் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சுவாசப் பிரச்சினைஉள்ளவர்கள், ஆஸ்துமா நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
மணலியில் அதிகம்மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, சென்னை மணலியில் அதிகபட்சமாக 2.5 மைக்ரான் அளவு கொண்ட மிக நுண்ணிய மாசு, ஒரு கனமீட்டர் காற்றில் 334 மைக்ரோ கிராம் இருந்தது. அனுமதிக்கப்பட்ட காற்று மாசு 60 மைக்ரோ கிராம்.
ஆனால் அதைவிட 4 மடங்கு மாசு அதிகரித்துள்ளது. இதேபோன்று ஆலந்தூர் பேருந்து நிலையத்தில் அதிகபட்சமாக 317 மைக்ரோ கிராம், வேளச்சேரி பகுதியில் 321 மைக்ரோ கிராம் மாசு பதிவாகியுள்ளது.
இவ்வாறு சென்னையில் காற்று மாசு அதிகரித்திருப்பது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:தற்போது வடகிழக்கு திசையில்கடலில் இருந்து தரைப்பகுதி நோக்கி வீசும் காற்று வலுவிழந்துள்ளது.
மேலும் காற்றில் ஈரப்பதம்அதிகமாக இருப்பதால் மாசுவுடன் கலந்துள்ளது. ஹைதராபாத் பகுதியில் எதிர்காற்று சுழற்சி (கடிகார முள் சுற்றுவது போன்று காற்று சுழலும்) நிலவி வருகிறது. அதன் காரணமாக கீழ் பகுதியில் உள்ள, வாகனப்புகை, சாலை புழுதி, கட்டுமானங்களால் மாசடைந்த காற்று மேலே செல்லவில்லை. இயற்கையாக மாசு சிதைவடைவது பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக சென்னையில் காற்று மாசு அதிகரித்து, பனிப்பொழிவு ஏற்பட்டது போன்று, தெளிவற்ற காட்சி நிலவுகிறது. இது மேலும் இரு நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. இதேபோன்று கடந்த 2017-ம் ஆண்டு தீபாவளியின்போதும், 2018-ம் ஆண்டு போகி பண்டிகை அன்றும் ஏற்பட்டது. அதேபோன்று தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.