

கி.பார்த்திபன்
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 63 கிளை மற்றும் ஊர்ப்புற நூலகங்களில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் நூலகங்களுக்கு வரும் வாசகர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் நூலகர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாவட்ட மைய நூலகம், 53 கிளை நூலகம், 69 ஊர்ப்புற நூலகம் மற்றும் 25 பகுதி நேர நூலகம் என மொத்தம் 148 நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களில் நாளிதழ், வார இதழ் மற்றும் வரலாற்று நூல்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. தவிர, போட்டித் தேர்வுக்குத் தேவையான நூல்களும் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றைப் படிக்க நகரம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள், மாணவ, மாணவியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சொந்தக் கட்டிடத்தில் செயல்படும் நூலகங்கள் தவிர இலவச மற்றும் வாடகைக் கட்டிடங்களில் செயல்படும் நூலகங்களில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் நிலவி வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக நூலகத்திற்கு வரும் வாசகர்கள் மட்டுமின்றி அங்கு பணிபுரியும் நூலகர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர். அதேவேளையில் சொந்தக் கட்டிடத்தில் இயங்கும் பல நூலகங்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் நூல கங்களுக்குள் தண்ணீர் புகுவதால் அங்கு வைக்கப்பட்டுள்ள நூல்கள் சேதமடையும் நிலை உள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) கோ.ரவி கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர், செம்மேடு, பெரியமணலி, ஆலாம்பாளையம், ஆர். புதுப்பட்டி, கொக்கராயன் பேட்டை, மொளசி, என்.கொசவம்பட்டி, வேமன்காட்டு வலசு, கவிஞர் ராமலிங்கம்பிள்ளை நினைவு நூலகம், பாலமேடு, செல்லப்பம்பட்டி, எலச்சிபாளையம் உள்ளிட்ட 13 கிளை நூலகங்கள் மற்றும் 50 ஊர்ப்புற நூலகங்களில் கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லை.
நூலகங்களுக்கு உள்ளாட்சி அமைப்பு மூலம் பெறப்படும் நூலக வரியே நிதி ஆதாரம். இந்த நிதியும் நூல்கள் வாங்குதல், கட்டிடங்களை பராமரிப்பு செய்தல், நூலகர்களின் ஊதியம், நாளிதழ், பருவ இதழ்கள் வாங்குவதல் உள்ளிட்ட அத்தியாவசிய செலவினங் களுக்கே போதுமானதாக இல்லை. எனவே, மேற்குறிப்பிட்ட நூலகங்களில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அந்தந்த ஊராட்சி ஒன்றிய மேம்பாட்டு நிதி அல்லது மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதி மூலம் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளும்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பப்பட்டுள்ளது.
இதுபோல், நாமக்கல் மாவட்டத்தில் அக்கரைப்பட்டி, பரமத்தி, குருசாமிபாளையம், செல்லப்பம்பட்டி, பாலமேடு ஆகிய 5 கிளை நூலகங்கள் மற்றும் 16 ஊர்ப்புற நூலகங்கள் வாடகை மற்றும் இலவச கட்டிடங்களில் போதிய இடவசதியின்றி செயல்பட்டு வருகிறது. இந்த 21 நூலகங்களுக்கும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அல்லது ஊராட்சி ஒன்றியம், மாநில திட்டக்குழு நிதியுதவியின் மூலம் புதிய நூலகக் கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் வைக்கப்பட்டுள்ளது, என்றார்.