Published : 05 Nov 2019 09:58 AM
Last Updated : 05 Nov 2019 09:58 AM

ஓட்டுநர் உரிமம் வழங்குவதை முறைப்படுத்த ஆர்டீஓ அலுவலகங்களில் புதிதாக மாதிரி ஓட்டுநர் பயிற்சி நிலையம்: போக்குவரத்து ஆணையர் சி.சமயமூர்த்தி தகவல்

கோப்புப்படம்

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை

ஓட்டுநர் உரிமம் வழங்குவதை முறைப்படுத்துவதற்காக ஆர்டீஓ அலுவலகங்களில் புதிதாக மாதிரி ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து ஆணையர் சி.சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சாலை விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவே முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால், ஓட்டுநர் உரிமம் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 42 போக்குவரத்து ஓட்டுநர் தேர்வுத் தளங்களையும் கணினி மயமாக்கப்பட்ட தேர்வுத் தளங்களாக மாற்ற அரசு முடிவெடுத்து அறிவித்தது.

முதல்கட்டமாக திருவண்ணாமலை, நாமக்கல் (வடக்கு), கடலூர், சேலம் (மேற்கு), திண்டுக்கல், திருச்சி (மேற்கு), கரூர், ஈரோடு, மதுரை (வடக்கு), விருதுநகர், கோயம்புத்தூர் (மத்தி), திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சங்ககிரி ஆகிய 14 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை (ஆர்டீஓ) கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுத் தளங்களாக உருவாக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதற்கிடையே, மாநில சாலை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமை செயலர் கே.சண்முகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். சாலை விபத்துகளை குறைப்பது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஆர்டீஓ அலுவலகங்களில் புதிதாக மாதிரி ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் (சிமுலேட்டர் சென்டர்ஸ்) நிறுவ இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிதாக ஓட்டுநர் உரிமம் வாங்கவருவோருக்கு கூடுதல் பயிற்சி அளிக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து ஆணையர் சி.சமயமூர்த்தி கூறியதாவது:ஓட்டுநர்களின் கவனக்குறைவே 80 சதவீத சாலை விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. சாலை விதிகளை பின்பற்றாதது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டிச் செல்வது ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எனவே, புதிதாக ஓட்டுநர்உரிமம் வழங்குவதை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஓட்டுநர் உரிமம் பெறுவோருக்கு சாலை பாதுகாப்பு குறித்து கட்டாய பயிற்சி வகுப்பு நடத்துகிறோம்.

அடுத்தகட்டமாக, புதிதாக மாதிரி ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் (சிமுலேட்டர் சென்டர்ஸ்) நிறுவி பயிற்சிஅளிக்க உள்ளோம். சாலையில் வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது என்னென்ன விதிகளை பின்பற்ற வேண்டும், வாகனம் ஓட்டிச் செல்லும்போது நடைமுறையில் ஏற்படும் சவால்கள் என்ன, அவற்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்த நிலையத்தில் வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்ள முடியும்.

வாகனம் ஓட்டும்போது கியர் இயக்குவது, பார்க்கிங் பிரேக் பயன்படுத்துவது, வேகம் கட்டுப்படுத்துவது ஆகியவற்றுக்கான பயிற்சிகளையும் பெற முடியும். இதனால், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பே, உரிய பயிற்சிகள் மூலம் சாலை விதிகள் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x