Published : 05 Nov 2019 08:43 AM
Last Updated : 05 Nov 2019 08:43 AM

மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளை அதிகமாக கேட்பதால் கூட்டணி கட்சிகளிடம் சிக்கித் தவிக்கும் அதிமுக, திமுக தொகுதி: பங்கீடு குறித்து மறைமுக பேச்சுவார்த்தை தொடக்கம்

எம்.சரவணன்

சென்னை

மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளை கூட்டணிக் கட்சிகள் அதிகமாகக் கேட்பதால் அதிமுகவும், திமுகவும் சிக்கலில் தவித்து வருகின்றன.

தமிழகத்தில் கடந்த 2016 அக்டோபரில் நடைபெற்று இருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் 3 ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு விரைவில் நடைபெறவுள்ளது. வரும்டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தமிழக மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆளும் அதிமுகவும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் மற்றும் பிற கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரை அடையாளம் கண்டு பட்டியல் அளிக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக, மதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக எம்.பி., எம்எல்ஏ.க்களின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள திமுக பொதுக்குழுக் கூட்டம் வழக்கமானது என்றாலும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தே முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளை கூட்டணி கட்சிகள் அதிகமாகக் கேட்பதால் பிரதான கட்சிகளான அதிமுக, திமுகவுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகள், 99,333 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு கட்சி சார்பற்று தேர்தல் நடைபெறவுள்ளது. இவை தவிர்த்து 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், 6,471 ஊராட்சி ஒன்றியக் குழு வார்டுகள், 31 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 655 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன.

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய நீதிக் கட்சி ஆகியவை உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளன.

பேச்சுவார்த்தை தொடக்கம்

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தையை அதிமுகவும் திமுகவும் தொடங்கியுள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 2 மேயர் பதவிகளைக் கேட்பதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளிப்படையாகவே கூறியுள்ளார். கோவை, திருப்பூர், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகளை பாஜகவும் சேலம், வேலூர், ஆவடி, கிருஷ்ணகிரி ஆகிய மாநகராட்சிகளை பாமகவும் விருப்பப் பட்டியலாகக் கொடுத்து, அதில் தலா 2 மேயர் பதவிகளைக் கேட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் திருநெல்வேலி, திருச்சி, நாகர்கோவில், திண்டுக்கல் ஆகியவற்றில் ஏதாவது இரண்டு வேண்டும் என்று காங்கிரஸும், மதிமுக ஈரோட்டையும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கோவையையும், இந்திய கம்யூனிஸ்ட் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளையும் கேட்பதாகக் கூறப்படுகிறது. விசிகவும் மேயர் பதவியை கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், கூட்டணியில் உள்ள கட்சிகள் இரட்டை இலக்கத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிகளை கேட்டு வற்புறுத்தி வருவதாக அதிமுக, திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிகளையும் கணிசமான எண்ணிக்கையில் கூட்டணிக் கட்சிகள் கேட்டுள்ளது அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு அவசியம் என்பதால் உள்ளாட்சித் தேர்தலில் ‘கறார்’ காட்ட முடியாத நிலையில் அதிமுகவும் திமுகவும் தவித்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x