

சென்னை
திருவள்ளுவர் குறித்து அவரவர் பேசுவதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்த பின்னர் வைகோ தெரிவித்தார்.
இன்று மாலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தார். சுமார் அரை மணிநேரச் சந்திப்புக்குப் பின் வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
“உலகப் பொதுமறை தந்த வான்புகழ் கொண்ட வள்ளுவர் பெருந்தகைக்கு நிகரான ஒரு அறிஞர் எந்த நாட்டிலும் எந்த நிலையிலும் தோன்றியதில்லை என்று நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் சூசர் சொன்னார்.
வள்ளுவப் பெருந்தகை காலங்களைக் கடந்தவர். மதங்களை, மொழிகளை, நாடுகளைக் கடந்தவர். அத்தகைய உலகப் பேரறிஞர் பேரொளியாகத் திகழ்கிறார் திருவள்ளுவர். தான் வழங்கிய உலகப் பொது மறையில் எந்த மன்னனையும் குறிப்பிட்டதில்லை, எந்த நாட்டையும் குறிப்பிட்டதில்லை. எந்த மலையையும் , நதியையும் அதன் பெயர்களையும் குறிப்பிட்டதில்லை.
எல்லாவற்றையும் விட தமிழ் என்ற சொல் கூட அதில் இருக்காது. எந்த சமயத்தினரும் இது எங்களுக்குச் சொந்தம் என்று சொந்தம் கொண்டாட முடியாது. அவருக்குக் காவி வண்ணம் பூசுவது, மதச்சாயம் பூசுவது மன்னிக்க முடியாத செயலாகும்.
இன்று தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவருடைய சிலை அவமதிக்கப்படுகிறது. சில அழுகிப்போன கயமைத்தனம் கொண்ட வஞ்சகர்களால் நடந்த ஒரு வெட்கக்கேடான காரியம். திருவள்ளுவரைச் சொன்னால்தான் தமிழகத்தில் மதிப்பு கிடைக்கும் என்று பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் இப்போது சொல்கிறார்கள்.
வள்ளுவரைப் போற்றுவோம். மனித வளத்தைக் காப்போம்’’.
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
பின்னர் அரசியல் குறித்து ஏதேனும் பேசப்பட்டதா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த வைகோ, ''இரண்டு அரசியல்வாதிகள் கலந்து பேசினால் அரசியல் பேசத்தான் செய்வார்கள். உள்ளாட்சித் தேர்தல் வருகிறதா? வரவில்லையா? என்பதைப் பார்ப்போம். திருவள்ளுவரைப் பற்றி மற்றவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை” என்றார்.