

மதுரை
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பணம் கையாடல் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பணம் ரூ.73,04,618 போலி ரசீது மூலம் கையாடல் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக கோயில் தற்காலிக கணினி ஆபரேட்டர் சிவஅருள்குமரன், கோயில் கணக்காளர் ரவீந்திரன் மீது கோயில் உதவி ஆணையர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கணக்காளர் ஜாமீன் பெற்றார். சிவஅருள்குமரன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "இந்த முறைகேட்டிற்கும் எனக்கும் தொடர்பில்லை. நான் தற்காலிக ஊழியர் மட்டுமே. உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற என்னை வழக்கில் சேர்த்துள்ளனர். நான் 24 நாள் சிறையில் இருந்துள்ளேன். கணக்காளருக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று (நவ.4) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். இந்த வழக்கில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. இந்த வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை. எனவே விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டார்.