

மதுரை
திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பில்லை என்றே எனது ட்விட்டரில் கூறியிருந்தேனே தவிர அவர் இந்து துறவி என்று நான் கூறவில்லை என அமைச்சர் பாண்டியராஜன் விளக்கமளித்தார்.
மேலும், திருவள்ளுவருக்கு இந்துக்கள் திருநீறு போடவேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள், கிறிஸ்தவர்கள் அவருக்கு ஒரு சிலுவை போட வேண்டும் என்றால் போட்டுக்கொள்ளுங்கள். எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை என்று கூறினார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இன்று (திங்கள்கிழமை) கீழடி அகழாய்வு தொல்பொருட்களின் கண்காட்சியினை அமைச்சர்கள் பாண்டியராஜன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர், தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் திருவள்ளுவருக்கு தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் காவி உடை அணிவிக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் பதிந்த ட்வீட்டை ஒட்டி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், "லார்ட் எல்லீஸ் என்பவர் சென்னையின் மின்ட் பகுதியின் தலைவராக இருந்தார். அவர் தங்க நாணயம் அடிக்கும்போது அதன் பின்னணியில் திருவள்ளுவரின் உருவத்தைப் பொரித்துள்ளார். அந்த உருவம் சமன துறவிபோல் இருக்கிறது எனக் கூறியிருந்தேன்.
தியான நிலை, தலைக்கு பின் ஒளிவட்டம் இருப்பது ஆகியனவற்றை வைத்தும், வள்ளுவர் ஆதிபகவன் முதற்றே உலகு என்று எழுதியதன் அடிப்படையிலும் அவ்வாறு கூறியிருந்தேன். ஆதிநாத் என்பவர் சமனர்களின் குரு.
வள்ளுவர் சமன துறவியாக, வைனவ அல்லது இந்து துறவியாக இருந்திருக்கலாம். அது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால், கடவுள் வாழ்த்து எழுதியதனால் அவர் நாத்திகராக இருக்க வாய்ப்பில்லை என்பதே எனது வாதம்.
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் எல்லீஸ் பிரபு அடித்த தங்க நாணயங்கள் இருக்கிறது. அதனை நாம் ஆய்வுக்கு உட்படுத்துவோம். அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வருவோம். திருவள்ளுவர் உலகப் பொதுமறையைக் கொடுத்திருக்கிறார்.
அவர் எல்லோருகும் பொதுவானவர். அதனாலேயே நான் அவ்வாறு கூறினேன்.
திருவள்ளுவருக்கு இந்துக்கள் திருநீறு போடவேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள், கிறிஸ்தவர்கள் அவருக்கு ஒரு சிலுவை போட வேண்டும் என்றால் போட்டுக்கொள்ளுங்கள். எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. எல்லா மதத்தவரும் தம்மவர் என்று சொல்லக்கூடியவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். எந்த மதத்தவரும் அவரை எம்மவர் என்று கூற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு." இவ்வாறு அவர் கூறினார்.