Last Updated : 04 Nov, 2019 05:24 PM

 

Published : 04 Nov 2019 05:24 PM
Last Updated : 04 Nov 2019 05:24 PM

32 மாவட்டங்களிலும் பேரிடர் விழிப்புணர்வு முகாம்; ஓர் உயிரிழப்புகூட நிகழக்கூடாது என்பதே இலக்கு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

மதுரை

விழிப்புணர்வு இல்லாமலோ, கவனக்குறைவாலோ ஓர் உயிரிழப்புகூட நிகழக்கூடாது என்ற நிலையை உருவாக்க, 32 மாவட்டங்களிலும் நடத்தப்படும் விழிப்புணர்வு முகாம் மூலம் பேரிடர் மேலாண்மைத்துறை அடுத்த கட்டத்திற்கு உயரும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் 32 மாவட்டங்களிலும் நடக்க உள்ளது.

முதல் முகாம் இன்று (நவ.4) மதுரையில் துவங்கியது. அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி, டிஜிபி.க்கள் சைலேந்திரபாபு, மகேஷ்குமார் அகர்வால், மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் உட்பட பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். மீட்பு பணி குறித்து பல்வேறு துறையினர் செயல் விளக்கம் அளித்தனர்.

முகாமில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

உயிரிழப்பை தவிர்ப்பதில், பேரிடர் மேலாண்மை துறை மட்டுமின்றி, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பும், கடமையும் உள்ளது. தனி மனிதன் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து மக்கள் இயக்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

போதிய விழிப்புணர்வு இல்லாமலோ, கவனக்குறைவாலோ ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே எங்கள் முயற்சியின் நோக்கம். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து 32 மாவட்டங்களிலும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. தங்களை தற்காத்துக்கொள்கின்ற விழிப்புணர்வை ஒவ்வொருவருக்கும் இந்த முகாம் ஏற்படுத்தும். வீடுதோறும் மக்கள் இயக்கமாக உருவாக்கப்படும்.

விழிப்புணர்வு இல்லாமலோ, கவனக்குறைவாலோ ஓர் உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்ற நிலையை உருவாக்குவோம்.

பெற்றோர்கள் கவனக்குறைவால், குழந்தைகளின் அறியாமையால் நீர்நிலைகளில் உயிரிழிப்பு என்பதும் அறவே தவிர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் பேரிடர் மேலாண்துறை அடுத்த உயர் நிலையை எட்டும். இதை மக்களிடம் கொண்டு சேர்த்து மக்கள் இயக்கமாக மாற்றுவதில், ஊடகத்தின் பங்களிப்பு மிக முக்கியம்.

மதுரை மாவட்டத்தில் முன் மாதிரியாக இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதை மாதிரியாகக்கொண்டு மற்ற மாவட்டங்களிலும் முகாம் நடக்கும் என்றார்.

இன்று (நவ.5) திருச்சி, நாளை(நவ.6) சென்னை என தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும். அதிநவீன கருவிகள் அனைத்தும் நம்மிடம் உள்ளது. மேலும் கருவிகள் வாங்க நிதி வழங்கப்பட்டுள்ளது. என்றார்.

வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷணன் கூறுகையில், ‘சமுதாயத்தை மையமாக வைத்து பேரிடர் மேலாண்மையில் வெற்றி பெற திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்.

மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறியும் பணியில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ வாட்டர் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைத்துக்கொள்ளப்படும்’ என்றார்.

மாணவ, மாணவியரின் விழிப்புணர்வூட்டும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. காவல்துறை ஐஜி.சண்முகராஜேஸ்வரன், மதுரை காவல் துணையர் டேவிட்சன் தேவாசரீர்வாதம், டிஐஜி ஆனிவிஜயா, எஸ்பி என்.மணிவண்ணன் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, கல்வித்துறை, பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்றனர். பல்வேறு பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் எவ்வாறு நடக்கிறது என்பதை செயல் விளக்கமாக காண்பித்தனர். மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் கருவிகள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x