மாநகர சாலைகளில் திரியும் மாடுகளால் மக்கள் அவதி: போலீஸார் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல்

மாநகர சாலைகளில் திரியும் மாடுகளால் மக்கள் அவதி: போலீஸார் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல்
Updated on
2 min read

ஜெ.ஞானசேகர்

திருச்சி

மாநகர சாலைகளில் திரியும் மாடுகளால் பல்வேறு வழிகளில் பொதுமக்கள் அவதிப்படுவதால், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

திருச்சி மாநகர சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்துக்கும் கேடு விளைவதைத் தடுக்கும் வகையில், மாநகரில் கால்நடைகளை வளர்ப்பதற்கென உப விதிகள் தயார் செய்யப்பட்டு 30.04.2013 அன்று மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, கால்நடை வைத்திருப்போர் அவற்றுக்கு மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெற்று, தங்கள் வளாகத்துக்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளர்க்க வேண்டும். சாலைகளிலோ, பொது இடங்களிலோ கால்நடை களைத் திரியவிடக் கூடாது.

ஆனால், இந்த விதிகளை கால்நடைகள் வளர்ப்போர் பலரும் பின்பற்றாமல் தேசிய நெடுஞ்சாலை உட்பட மாநகர சாலைகளில் கால்நடைகளை திரியவிடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதுடன், போக்குவரத்து நெரிசல் உட்பட பல்வேறு வழிகளில் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியது: திருச்சி மாநகரில் பேருந்து நிலையங்கள் உட்பட பல்வேறு சாலைகளிலும் மாடுகள் சுற்றித் திரிகின்றன. கொட்டப்பட்டு ஆவின் பால்பண்ணை அருகே அண்மையில் மோட்டார் சைக்கிள் மீது மாடு மோதியதில் இளைஞரின் கால் உடைந்தது. இதனால், 6 மாதங்கள் வரை அவரால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மாநகர சாலைகளில் பல இடங்களிலும் கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றித் திரிவதுடன், சாலையிலேயே படுத்துக் கொள்கின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு நேரிடுவதுடன், விபத்தும் ஏற்படுகிறது. சாலைகளில் திரியும் கால்நடைகளை கடந்து செல்லும்போது அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புறங்களில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1997-ன் அடிப்படையில், கால்நடைகள் வளர்ப்பதற்கான விதிமுறைகளை மீறுவோருக்கு 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும். எனவே, சாலையில் திரியும் கால்நடைகளைப் பிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 289, பிராணிகள் வதை தடுப்புச்சட்டம் 11 (H)-ன் படி வழக்கு பதிவு செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான், சாலையில் கால்நடைகள் திரிவதைத் தடுக்க முடியும். அதோடு, கால்நடைகளால் விபத்தில் சிக்குவோரின் முழு சிகிச்சை செலவையும் விபத்துக்கு காரணமான கால்நடை உரிமையாளர்களிடம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி வட்டாரங்கள் கூறியது: சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் மட்டும் அக்.2-ம் தேதி ஒரே நாளில் சாலையில் சுற்றித்திரிந்த 99 மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளால் பாதிக்கப்படுவது சக மனிதர்கள்தான்.

எனவே, இந்த விவகாரத்தில் அதிக பொறுப்பு கால்நடை உரிமையாளர்களுக்கு உண்டு. சாலையில் திரியும் கால்நடைகள் விபத்துக்கு காரணமாவதுடன், கவனிப்பார் இல்லாததால் உணவுப் பொருட்க ளுடன் வீசப்படும் பாலித்தீன் பைகளை கால்நடைகள் தின்று உடல்நலன் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கால்நடை உரிமையாளர்கள் இதை உணர்ந்து கால்நடைகளை சாலையில் திரியவிடாமல் வளர்க்க வேண்டும். கால்நடைகள் திரிவதைத் தடுக்க அபராதத் தொகையை ரூ.10,000 வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in