Published : 04 Nov 2019 02:25 PM
Last Updated : 04 Nov 2019 02:25 PM

திருவள்ளுவரை உரிமை கோர இந்துத்துவ சக்திகளுக்கு தார்மீகத் தகுதியில்லை: திருமாவளவன் விமர்சனம்

பாஜக ட்விட்டரில் பதிவிட்டிருந்த திருவள்ளுவர் படம் - திருமாவளவன்

சென்னை

இந்துத்துவ சக்திகள் திருவள்ளுவரை தங்களுக்கான அடையாளமாக உரிமை கோர முடியாது என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, திருமாவளவன் இன்று (நவ.4) வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது:

"தமிழக பாஜகவின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தி, திருநீறு பட்டை பூசி, அவரை இந்து மதம் சார்ந்த ஒரு முனிவரைப் போல, காட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது அநாகரிகத்தின் உச்சமாகும். இந்தப் போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

திருவள்ளுவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்று சமண மதத்தினர் உரிமை கோருவதைப் பார்க்க முடிகிறது. அயோத்திதாச பண்டிதர் போன்றவர்கள், திருவள்ளுவர் புத்த மதத்தைத் தழுவி திருக்குறளை இயற்றியிருக்கிறார் எனவும், அது 'திருக்குறள்' அல்ல, 'திரிகுறள்' என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.

இப்படி சமணம், பவுத்த மத முன்னோர், திருவள்ளுவரைத் தங்களுக்குரிய அடையாளமாக உரிமை கோரியிருப்பதை அறிவோம். அதே அடிப்படையில் இந்து மதம் சார்ந்தவர்களும் அவ்வாறு உரிமை கோரினால் என்ன தவறு என்ற கேள்வி எழலாம்.

சமணமும் பவுத்தமும் சமத்துவத்தை ஏற்றுக்கொண்ட கருத்தியல்கள். சாதி அடிப்படையில், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை ஏற்காத மார்க்கங்கள் தான் சமணமும் பவுத்தமும். அந்த அடிப்படையில் பார்த்தால், அவர்கள் உரிமை கோருவதில் ஒரு பொருள் இருக்கிறது.

திருவள்ளுவர் சமத்துவத்திற்காகப் போராடியவர். அவர் இயற்றிய திருக்குறள் உலகப் பொதுமறையாக நாடு, இனம் கடந்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அதுவே காரணமாகும். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற மகத்துவமான தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு இயற்றப்பட்ட அறநூல்தான் திருக்குறள்.

இந்துத்துவம் சமத்துவத்திற்கு நேர் எதிரானது. சமத்துவத்திற்கு முதல் பகையே, பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு உண்டு என சொல்லும் கருத்தியல்தான். இந்துத்துவம் பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு உண்டு என்பதைக் கற்பிக்கக்கூடிய சனாதன கருத்தியல் என்பதை உலகம் அறியும்.

எனவே எந்த அளவுகோலின் அடிப்படையிலும் இந்துத்துவ சக்திகள் திருவள்ளுவரைத் தங்களுக்கான அடையாளமாக உரிமை கோர முடியாது. அதற்கு தார்மீகமான தகுதியே இல்லை. இந்தப் போக்கு அவரை அவமதிக்கும் செயலாகும். உடனடியாக, இந்தப் போக்கைக் கைவிட வேண்டும்.

தஞ்சை, பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை அவமதித்திருப்பது அநாகரிகமான போக்கு. அம்பேத்கர், பெரியார் சிலைகளை அவமதித்த பிற்போக்கு சக்திகள், இப்போது திருவள்ளுவர் சிலையையும் அவமதிப்பது அதிர்ச்சியளிக்கிறது. திருவள்ளுவரையேஅவமதிக்கும் செயலுக்கு தமிழ்நாடு சென்றிருக்கிறது என்பது, ஜனநாயக சக்திகள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இதற்காக தமிழர்கள் அனைவருமே வெட்கப்பட வேண்டும்.

அவமதித்தவர்கள் யாராக இருந்தாலும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்,. இதனை அலட்சியப்படுத்தக் கூடாது. வழக்கம்போல காலம் தாழ்த்தக் கூடாது. அல்லது தகுதியற்ற ஒருவரை அவர் மனம்பிறழ்ந்து செய்தார் என, திசைதிருப்பக் கூடாது. திருவள்ளுவரின் நன்மதிப்புக்கு கேடு விளைவிக்கும் அளவுக்குச் செயல்பட்டதற்காக பாஜகவைச் சார்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x