

சென்னை
திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் சாணம் வீசியும் கருப்புக் காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிப்பு செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை இழிவுபடுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக பாஜக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டிருப்பதற்கும் இன்று தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை களங்கப்படுத்தப்பட்டிருப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
எனவே, உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தி, இந்தக் கொடுமையைச் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என வலியுறுத்தினார்.
வாட்ஸ் அப் மூலம் மத்திய அரசு சமூகச் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களை உளவு பார்ப்பதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்துப் பேசிய ஸ்டாலின், "நான் மட்டுமல்ல, எல்லா கட்சித் தலைவர்களும் அதனைக் கண்டித்திருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனத் தெரிவித்தார்.
மேலும், திருவள்ளுவர் சிலை அவமதிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், "பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது - தஞ்சை, பிள்ளையார்பட்டியில் அவரது சிலையை அவமானப்படுத்துவது என, தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது. இதற்காக, காவல்துறையை கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்," என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.